முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் கள்ளச்சாராயம் என மெத்தனால் கலந்த தண்ணீரை குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆனது

புதன்கிழமை, 27 ஜூலை 2022      இந்தியா
Gujarat 2022 07 26

குஜராத் மாநிலம், போதாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் என்று கூறி விற்கப்பட்ட மெத்தனால் கலந்த தண்ணீரைக் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று முன்தினம் வரை 33 பேர் மரணமடைந்த நிலையில், கடந்த 12  மணி நேரத்தில் மேலும் 7 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 40 ஆனது. பலியானவ்ரகளில் போதாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 31 பேரும், மற்றவர்கள் இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களுக்கு திங்கள்கிழமை காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, இந்த விஷயம் வெளியே தெரிந்தது. அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் போதாட் நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றஉ காலை வரை 40 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 31 பேர் போதாட் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள்; எஞ்சிய 9 பேர் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் பாவ்நகர், போதாட், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. ஜெயேஷ் என்கிற ஆகாஷ், அகமதாபாதில் உள்ள ஒரு கிடங்கில் மேலாளராக வேலை செய்து வருகிறார். அவர் அந்த கிடங்கில் இருந்து 600 லிட்டர் மெத்தனாலை திருடி போதாட் மாவட்டத்தில் உள்ள தனது உறவினரான சஞ்சய்க்கு ரூ.40,000-க்கு கடந்த 25-ஆம் தேதி விற்பனை செய்துள்ளார்.

சஞ்சயிடம் இருந்து சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த வியாபாரிகள் அதை வாங்கிச் சென்றுள்ளனர். அது, தொழிற்சாலைகளில் கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் என நன்றாகத் தெரிந்தும் வியாபாரிகளுக்கு சஞ்சய் விற்பனை செய்துள்ளார். உள்ளூர் வியாபாரிகள் எத்தனாலில் நீர் கலந்து நாட்டுச் சாராயம் எனக் கூறி ஒரு பாக்கெட் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பர்வாலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவும், அகமதாபாத் குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. உயிரிழந்தவர்கள், மெத்தனாலை குடித்திருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, 14 பேர் மீது கொலை செய்தல், விஷம் கொடுத்து துன்புறுத்துதல், குற்றச்சதி என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுவிட்டனர். இதுதவிர, மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை மாநில உள்துறை அமைத்துள்ளது. அந்தக் குழு 3 நாள்களில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து