முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருங்காலங்களில் தமிழகத்தில் மாவட்டங்களின் வளர்ச்சியில் வேறுபாடு இருக்கக்கூடாது : திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-1 2022-08-12

Source: provided

சென்னை : வருங்காலத்தில் தமிழகத்தில் முன்னேறிய மாவட்டம் - பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது என்று விரும்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் மாநிலத் திட்டக்குழுவின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, 

இந்த 15 மாதங்களில் திட்டக்குழுவின் சார்பில் மூன்று கூட்டங்கள் நடைபெற்று, மாநிலத்திற்கான திட்டங்களை நாம் ஆலோசித்து வருகிறோம்.  இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாகத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது.  எந்தக் கொள்கையாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை தருவதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். இவை தவிர மாநிலத்திற்கு தேவையான எதிர்கால நோக்குடன் கூடிய மருத்துவம், சமூகநலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் போன்ற முக்கிய துறை சார்ந்த சில கொள்கைகளையும் விரைந்து வகுத்து இறுதி செய்திட வேண்டும்.

குறிப்பாக, மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டம் இன்று மக்களின் இதயத்தில் நீங்காத இடம்பெற்றுள்ளது. இதில் பயனடைந்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள்  என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.   இத்திட்டத்தால் அந்தக் குடும்பங்களின் வருவாயில் 8 முதல் 12 விழுக்காடு சேமிப்பு கிடைக்கிறது என்பது ஒரு பொருளாதாரப் புரட்சி.  ஆகவே, இத்திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் இன்னமும் பயனடைய வேண்டும். இதன் மூலமாக அவர்களது வாழ்க்கைத் தரம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதையும் அடையாளம் காண வேண்டும்.  

இத்திட்டம் மட்டுமல்ல, பொது விநியோகத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்பாடாமல் இருக்க என்ன வழி என்பதை கண்டறிய வேண்டும்.  அறிவிக்கப்படும் திட்டத்தின் பிளஸ், மைனஸ் ஆகிய இரண்டையும் அலசி ஆராய்ந்து அரசுக்குச் சொல்ல வேண்டும். திட்டமிடும் குழுவாக மட்டுமல்ல, கண்காணிக்கும் குழுவாகவும் நீங்கள் இருக்க வேண்டும்.

மகளிர்க்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம், சமூக பொருளாதார அளவுகளில் ஏற்படுத்தி வரும் நேர்மறையான தாக்கங்கள் குறித்த கட்டுரைகள் பல்வேறு தளங்களில் வர வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  நமது அரசினுடைய திட்டங்கள் குறித்து மற்ற மாநில அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என்ன மாதிரியான கருத்துகளை, ஆலோசனைகளை தெரிவிக்கிறார்கள் என்பதையும் அறிந்து சொல்லுங்கள். 

திராவிட மாடல் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று அனைத்து மாவட்ட வளர்ச்சி. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை இருக்கும். அதனை வரையறுத்து அரசுக்கு அதிலிருந்து சில திட்டமிடுதல்களையும் பரிந்துரைகளையும் செய்ய வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம் - பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். 

நமது திட்டங்களைப் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அது போல பிற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுத்தக்கூடிய திட்டங்களை குறிப்பிட்டுச் சொன்னால் நலமாக இருக்கும்.  இதுவரை மாநிலத் திட்டக் குழு எடுத்துள்ள முயற்சிகள் அரசின் செயல்பாட்டிற்கு தூண் போல் நின்று உதவுகிறது. இந்தத் திட்டக்குழு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பொன்னேட்டில் பதிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான கொள்கைகளை வகுத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து