முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் முதல் முறையாக 'மோட்டோஜிபி' பைக் பந்தயம்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2022      விளையாட்டு
Bike 2022--09-21

Source: provided

'கிராண்ட் பிரிக்ஸ்' மோட்டார் சைக்கில் ரேசிங் எனப்படும் மோட்டோஜிபி பைக் பந்தயம் போட்டி சர்வதேச அளவில் பிரபலம் ஆகும். இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப் பைக் பந்தய போட்டியை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக இந்தியா பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் 'கிராண்ட் பிரிக்ஸ் ஆப் பாரத்' என்ற பெயரில் நடத்தப்பட உள்ளது. 

2022 மோட்டோ ஜிபி உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான பந்தயங்கள் நொய்டா நகரில் உள்ள புத்தா சர்வதேச சர்க்கியூட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 19 நாடுகளை சேர்ந்த பைக் ரேஸ் பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 'மோட்டோஜிபி' உலக சாம்பியன்ஷிப் பைக் பந்தய போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

______________

ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இதற்கு முன்பு இரண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இந்த சாதனையைப் படைத்திருந்தார். அவர் 88 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினார். ஆனால் ஸ்மிருதி மந்தனா 76 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். இதனால் மகளிர் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி பெற்றார். 

ஒட்டுமொத்தமாக ஒப்பிடும்போது ஷிகர் தவான், விராட் கோலிக்கு பிறகு ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றுள்ளார். ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினர்.  ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டில் 22 வீராங்கனைகள் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர். இதில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தை பெலின்டா கிளார்க் (62 போட்டிகள்), இடண்டாவது இடத்தை மெக் லேன்னிங் (64 போட்டிகள்) ஆகியோர் பெற்றுள்ளனர். 

____________

இந்திய தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு 2 ஆண்டு தடை

கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் ப்ரீ 1 தடகள போட்டியின்போது பூவம்மாவிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தன. அதில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பால் (டபிள்யூஏடிஏ) தடைப் பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்த மருந்தை பூவம்மா பயன்படுத்தியதாகத் தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் ஊக்கமருந்து தடுப்பு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பூவம்மாவுக்கு 3 மாத தடை விதித்தது. 

அதற்கு எதிராக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மேல் முறையீடு செய்ததன் பேரில் தற்போது பூவம்மாவுக்கான தடைக் காலத்தை ஊக்கமருந்து தடுப்பு மேல்முறையீட்டு குழு 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதனிடையே ஊக்கமருந்து பயன்பாடு உறுதியானதால், பூவம்மா கடந்த மாா்ச் மாதம் இந்திய கிராண்ட் ப்ரீ 1 மற்றும் 2-இல் வென்ற இரு வெள்ளிப் பதக்கங்கள், ஏப்ரலில் ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்படவுள்ளன.

_____________

டி20 கிரிக்கெட்டில் அதிகவேகமாக 2000 குவித்து கேஎல் ராகுல் சாதனை

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மொகாலியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். 

இந்த போட்டியில் இந்திய அணியில் துவக்க வீரராக விளையாடிய கே.எல் ராகுல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அவர் 35 பந்துகளில் மூன்று சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரி என 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை அவர் கடந்தார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரராக பாபர் அசாம் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்தார்.

______________

கப்தில் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா

இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2022ம் ஆண்டில் 17 டி20 போட்டிகளில் 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் அடங்கும். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் ஒரு சிக்சர் அடங்கும். இதன்மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 172 சிக்சர்கள் அடித்து கப்தில் சாதனையை சமன் செய்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் 172 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து