முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 2024 பார்லி., தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடக்கும் : எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
EPS 2022-09-19

Source: provided

சேலம் : 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி என்றும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மட்டுமல்ல, இந்நாள் முதலமைச்சர் ஸ்டாலினாலும் எதுவும் செய்ய முடியாது என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர்களை திமுக அரசு பழிவாங்குவதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் வேகம் காட்டப்படுவதில்லை” என கூறினார்.

மேலும்,” அரசியல் பார்க்காமல், மாணவர்களுக்கு இலவச மடிகணினி திட்டத்தை தொடர வேண்டும். எதிர்கட்சிகளை பழிவாங்குவதை விட்டு, மக்களுக்கு நன்மை செய்யுங்கள். எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை மக்களுக்காக பயன்படுத்தினேன், எதிர்கட்சியையோ, யாரையுமோ பழிவாங்கவில்லை. நீங்கள் கோடு போட்டால், நாங்கள் ரோடு போடுவோம். மீண்டும் அதிமுக ஆட்சி, தமிழகத்தில் உருவாகும் அப்போது  விடமாட்டேன்” என எச்சரிக்கை விடுத்தார்.

இனி இந்த அரசாங்கத்தை நம்பி பயன் இல்லை. பெற்றோர்கள் ஒவ்வொருவரும் பள்ளிக்கு செல்லும் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, மாநிலம் முழுவதும் தாராளமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கூறினார். வருங்கால சந்ததியினர் சீரழிவதை தடுக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டதாக குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தபோது, 25 மாநிலங்கள் விலையை குறைத்தபோதும் தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை என்றார். மகளிருக்கு ஆயிரம் ரூபாய், சிலிண்டர் மானியம், கல்விக்கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அவர் விமர்சித்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்பிக்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் பேசியவர், என்னை டெம்பரரி தலைவர் என்கிறார் ஸ்டாலின். கருணாநிதி இருக்கும்போது ஸ்டாலின்தான் டெம்பரரி தலைவராக இருந்தார். எங்களை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. அதிமுகவில் அனைத்து தொண்டர்களுமே பொதுச் செயலாளர்தான். தொண்டர்களின் எண்ணத்தை அதிமுக எதிரொலிக்கிறது.

அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி என்னை தேர்ந்தெடுத்தனர். இதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. எந்த காலத்திலும் அதிமுகவை உடைக்க முடியாது. கனவு கண்டால் கானல் நீராகத்தான் இருக்க முடியும். சில கறுப்பு ஆடுகள் திமுகவிற்கு துணை போகிறார்கள். அவர்கள் முயற்சி பலிக்காது என்றும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து