முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுமை மிகு தமிழகமாக மாற்றிட ஒரு அங்குலம் இடம் இருந்தாலும் அதில் தாவரத்தை வளர்ப்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
CM-3 2022--09-24

Source: provided

சென்னை : ஒரு அங்குல இடம் இருந்தாலும் கூட, அதில் ஒரு தாவரத்தினை வளர்ப்போம் என உறுதிமொழி எடுத்து, ஒவ்வொருவரும் எத்தனை தாவரங்களை உருவாக்க முடியுமோ அத்தனை தாவரங்களை உருவாக்கி தமிழகத்தினைப் பசுமைமிகு தமிழகமாக மாற்றிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.09.2022) செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நடைபெற்ற பசுமை  தமிழ்நாடு  இயக்கத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

 இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், இயற்கையை நாம் நினைத்தால் நிச்சயமாக காப்பாற்ற முடியும். அதைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட உணர்வை எல்லோரும் பெற்றிட வேண்டும். அந்த அடிப்படையில் நம்மிடத்தில் இருக்கும் இயற்கை வளத்தைக் காப்பாற்றுவதற்காக இந்த பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு என்பதே பசுமை மாநிலம்தான். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம்முடைய தமிழினம். வளர்ச்சி என்பதன் பெயரால் இயற்கைக்கு சோதனை வரும்போதெல்லாம், இயற்கையையும் காத்து வளர்ச்சியை வழிநடத்தி வருகிறோம். அதனால்தான் தமிழ்நாடு அரசினுடைய பசுமைக் கொள்கை.

இயற்கையையும், பசுமையையும் அரசும், ஆட்சியும் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. மக்களும் சேர்ந்தால்தான் காப்பாற்ற முடியும். பல்லுயிரை நாம் காக்க வேண்டும். இந்த உலகம் என்பது மனிதர்களான நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. புல் பூண்டு தொடங்கி அனைத்து விலங்குகளுக்கும் சொந்தமானதுதான் இந்த உலகம். எனவே அவற்றை நாம் காக்க வேண்டும்.

இப்போது நமக்கு இருக்கக்கூடிய மாபெரும் அச்சுறுத்தல் என்பது காலநிலை மாற்றம்தான். காலநிலைகளை கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இன்றைக்கு மாறியிருக்கிறது. அதற்கு நாம் வனம், காடுகள் ஆகியவற்றை காக்க வேண்டும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான திறனை நாட்டு மரங்கள் தருகின்றன. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில், தட்பவெப்ப நிலை மாற்றங்களை தாக்குப் பிடிக்கும் மரங்களை அதிகமாக நடவேண்டும். அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமான இயற்கைச் சூழலை உருவாக்கியாக வேண்டும். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், உழவர்கள், கிராம ஊராட்சி மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தைப் பெருக்க இந்தத் திட்டம் உதவும் என நம்புகிறேன்.  ஒரு அங்குல இடம் இருந்தாலும் கூட, அதில் ஒரு தாவரத்தினை வளர்ப்போம் என உறுதிமொழி எடுத்து, ஒவ்வொருவரும் எத்தனை தாவரங்களை உருவாக்க முடியுமோ அத்தனை தாவரங்களை உருவாக்கி  இத்தமிழகத்தினைப் பசுமைமிகு தமிழகமாக மாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து