முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தும்குர் மருத்துவமனைில் சிகிச்சையளிக்க மறுப்பு: இரட்டைக் குழந்தைகளுடன் தமிழக பெண் பரிதாப மரணம்

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2022      இந்தியா
Ledy-baby 2022-11-04

Source: provided

பெங்களூரு : தும்குர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுத்ததால், இரட்டைக் குழந்தைகளும், பிரசவித்த தாயும் பலியான நிலையில், மூன்று அரசு மருத்துவமனை செவிலியர்களும், மருத்துவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர், 3 செவிலியர்களையும் மருத்துவரையும் பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவையும் அவர் நியமித்துள்ளார்.

அரசு மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளிடம் தவறாக நடந்து கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு வேளை, அரசு மருத்துவமனை ஊழியர்களும் மருத்துவர்களும் நோயாளிகளிடம் தவறாக நடந்து கொண்டால் அவர்கள் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். நான் இது குறித்து முதல்வரிடம் பேசியிருக்கிறேன், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனறும் சுதாகர் கூறியுள்ளார்.

உயிரிழந்த பெண் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி என்று கூறப்படுகிறது. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் தும்குர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் அவரிடம் ஆதார் உள்ளிட்ட எந்த ஆவணங்களும், மருத்துவ சான்றிதழ்களும் இல்லை என்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று அரசு மருத்துவமனை செவிலியர்களும் மருத்துவரும் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. பெங்களூரு செல்ல கையில் காசில்லாததால், வீட்டுக்குத் திரும்பிய கர்ப்பிணி, இரண்டு குழந்தைகளையும் பிரசவித்த நிலையில், அவரும் குழந்தைகளும் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து