முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்களூரு: ஆட்டோவில் குக்கர் வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் : கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் தகவல்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      இந்தியா
DGP 2022 11 21

Source: provided

கர்நாடகா : மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என கர்நாடக மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

குக்கர் குண்டு...

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி சாலையில் சென்ற ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த கர்நாடக மாநிலம் ஷிவமோகாவைச் சேர்ந்த முகமது ஷரீக் (27) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களை போலீஸார் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மங்களூரு போலீஸார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேரிடம் விசாரணை...

இந்நிலையில் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கர்நாடக மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் விளக்கம் அளித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏடிஜிபி, ஆட்டோவில் குக்கர் வெடித்தது தொடர்பாக மைசூரில் 2 பேர், கோவையில் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என்றார்.

தேடப்படும் நபர்...

ஆட்டோவில் பயணித்த ஷாரிக்கிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கிறதா? என விசாரணை நடைபெற்று வருகிறது. மங்களூரு ஆட்டோ வெடித்த வழக்கில் காயமடைந்த ஷாரிக் ஏற்கனவே ஒரு வழக்கில் தேடப்பட்டவர். இரு வழக்குகளில் உபா சட்டம் போடப்பட்ட நிலையில் மேலும் ஒரு வழக்கில் தேடப்பட்டவர் ஷாரிக் என கர்நாடக ஏடிஜிபி விளக்கம் அளித்தார்.

தனிப்படை திட்டம்...

இதற்கிடையே கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த முபின் குறித்து விசாரிக்க மங்களூருவில் இருந்து தனிப்படை கோவை வருகை தந்துள்ளது. மங்களூரு குண்டு வெடிப்பில் காயமடைந்த ஷாரிக் கோவை, மதுரை, குமரி மற்றும் கேரளாவில் தங்கியிருந்துள்ளார். ஷாரிக் கோவை காந்திபுரத்தில் தங்கியிருந்த போது தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் தங்கியிருந்தபோது யார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்து தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரை மங்களூரு அழைத்துச் செல்ல தனிப்படை திட்டமிட்டுள்ளது.

உறுதியானது...

மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தியது முகமத் ஷாரிக் என்பது உறுதியானது. ஷாரிக் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்த அடையாளத்தின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020ல் லஷ்கர் இ தொய்பா ஆதரவு வாசகங்களை எழுதியதற்காக ஷாரிக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து