முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிரந்த சட்டத்திற்கு கவர்னர் எப்போது ஒப்புதல் வழங்குவார் ? ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழகத்தில் காலாவதி ஆனது

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      தமிழகம்
Online Rummy 2022-11-27

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதி ஆனது. இதைத்தொடர்ந்து நிலுவையில் இருக்கும் மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகி பணத்தை இழந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்கள், பதைபதைக்க வைத்து விட்டன. இது மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் இடையேயும் பேசும் பொருளானது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்தது.

இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி, கடந்த மாதம் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

இது ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பு ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்தது. இந்த நிலையில், தமிழக அரசு, அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ந்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது.

அவசரச் சட்டத்தைப் போன்று இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான நிரந்தர தடைச்சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. கடிதம் எழுதினார். கடந்த 24-ந்தேதி காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு விளக்க கடிதத்தை அனுப்பி வைத்தது.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த 25-ந் தேதி நிருபர்களிடம் பேசும்போது, "கவர்னரின் கடிதத்தில் மசோதாவில் ஏற்பட்டுள்ள சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. விளக்கம் கேட்ட 24 மணி நேரத்திற்குள் சட்டத்துறை அதற்கான உரிய பதிலை தயாரித்து கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது என தெரிவித்தார்.

தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த மாதம் 1-ந்தேதி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் தானாகவே காலாவதி ஆகி விடும். இதுபற்றிய விதி, அரசியல் சாசன சட்டம் பிரிவு 213 (2) (ஏ)யில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர், தமிழக சட்டசபை கடந்த மாதம் 17-ந் தேதி கூடியது. நேற்று முன்தினம் 6 வாரங்கள் முடிந்துவிட்டது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் நேற்று முன்தினத்துடன் காலாவதியாகி உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய புதிய மசோதாவான 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-க்கு கவர்னர் கேட்ட விளக்கத்தை தமிழக அரசு அளித்தும், இன்னும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த மசோதாவுக்கு கவர்னர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சட்டம் காலாவதியாகி உள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் முழுவீச்சில் மீண்டும் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து