முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      தமிழகம்
CM-1 2022 12 03

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார். 

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் விருது பெற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி முதல்வர் கௌரவித்தார். மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திறன் பயிற்சியை தொடங்கி வைக்கும் விதமாக, நேற்று முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிடும் அடையாளமாக 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை முதல்வர் வழங்கினார். 

முன்னதாக, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 புதிய மாவட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனங்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். மேலும், ஊதா அங்காடி மற்றும் நவீன உதவி உபகரணங்களுக்கான கண்காட்சியினையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார். 

இவ்விழாவில், அமைச்சர்கள்  பொன்முடி, கீதா ஜீவன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் ஆர். ஆனந்த குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசன்ட் திவ்யா, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மற்றும் நல வாரியக் குழு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து