முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      விளையாட்டு
Sania-Mirza 2023-01-14

Source: provided

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடி வருகிறார். காலிறுதிச்சுற்றில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி, லட்வியா - ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஜோடியுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்திலிருந்து அவர்கள் விலகியுள்ளதால் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி சிரமம் இன்றி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

பிப்ரவரி மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா சமீபத்தில் அறிவித்தார். ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார். அடுத்த மாதம் பிப்ரவரி 19 முதல் நடைபெறவுள்ள துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவிட்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

---------------

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் ஆஸ்திரேலியா...!

15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கேலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் நேரடியாகவும், ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, கொரியா அணிகள் 2-வது சுற்று மூலம் கால் இறுதிக்கும் தகுதி பெற்றன. கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய முதலாவது காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஸ்பெயின் அணிகள் மோதின.

ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர். இறுதியில் ஆட்டத்தை 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

_______________

டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஆப்கான் வீரர் ரஷித் கான்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் 'லீக்' கிரிக்கெட் போட்டியில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியும் மும்பை கேப்டவுன் அணியும் மோதின. இந்த போட்டியில் ரசித் கான் 4 ஓவர் பந்து வீசி 16 ரன் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய ரஷித் அதில் பார்டுனின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக டுவெய்ன் பிராவோ மட்டுமே இருந்தார். தற்போது அந்த வரிசையில் 24 வயதான ரஷித் கான் இணைந்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் பிராவோ 556 போட்டிகளில் ஆடி 614 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக ரஷித் கான் 371 போட்டிகளில் ஆடி 500 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்திலும், சுனில் நரைன் 435 போட்டிகளில் ஆடி 435 விக்கெட்டுகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். 

_______________

ஐ.சி.சி. ஒருநாள் அணியில் 3 இந்திய வீராங்கனைகள்..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில் ஐசிசி 2022ம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணி மற்றும் பெண்கள் டி20 அணி மற்றும் 2022ம் ஆண்டுக்கான ஒருநாள் ஆடவர் அணி, டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்திருந்தது. இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் பெண்கள் அணியையும் ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து தலா 3 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அணியின் தொடக்க வரிசைக்கு ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலியும், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவும் தேர்வாகி உள்ளனர். மிடில் ஆர்டரில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வரார்ட், இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி தேர்வாகி உள்ளனர். தொடர்ந்து ஆல் ரவுண்டர்கள் இடத்துக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், நியூசிலாந்தின் அமெலியா கெர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். பந்துவீச்சாளர்கள் இடத்துக்கு இங்கிலாந்தின் ஷோபி எக்லெஸ்டோனும், இந்தியாவின் ரேனுகா சிங்கும், தென் ஆப்பிரிக்காவின் அயாபோங்கா காக்கா, ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து