முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      தமிழகம்
CM-2 2023 01 29

Source: provided

சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். 

சென்னையில் நேற்று நடந்த மருத்துவத் தமிழ் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

இந்த மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெற இருக்கிறது  என்பது மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட அந்த அழகுத் தமிழ்மொழியில் இந்த  மாநாடு நடைபெறுவது உள்ளபடியே பாராட்டுக்குரியது. 

செவித்திறன் குறைந்திருத்தல் போன்றவை சிலருக்கு பிறக்கும் போதே ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு காது கேளாமை அதிகளவில் அதிகரித்து வருகிறது. இது மரபு வழிப் பிரச்சினையாகவும் சொல்லப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு அடைதலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. காது மூக்கு தொண்டை கழுத்து இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பிரச்சினைகள். இது அனைவருக்குமான பிரச்சினை என்கிற காரணத்தினால்,  தாய்மொழியில் இந்த மாநாடு நடத்தப்படுவது மிகமிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அரசின் சார்பில் வெளியிட்டு இருக்கிறோம். தொழில் படிப்புகள் அனைத்தும் தாய்மொழியில் படிக்க வழிவகை செய்ய அனைத்து நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. 

மருத்துவம் என்பது எளிமையானதாக, புதுமையானதாக,  அதே நேரத்தில் அதிக செலவு இல்லாததாகவும் அமைய வேண்டும். மருத்துவம் நவீனமாக ஆகி வருகிறது. ஆனால் அதிகத் தொகை செலவழிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. நவீன மருத்துவ வசதிகள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்குகிறோம். மருத்துவக் காப்பீடு திட்டங்களின் மூலமாக வழங்குகிறோம். 

இந்த நாட்டில், அனைத்து தேவைகளையும், சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் மட்டும் வழங்கினால் போதாது.  இதில் தனியார் பங்களிப்பும் மிகமிக முக்கியமாக இருக்கிறது. அப்படி தனியார் மருத்துவமனைகள் பங்களிப்பு செய்யும் போது கட்டணம் என்பது ஏழைகளுக்கு உதவுவதாக அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள். சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும். உலகில் திறமையான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அந்த வகையில் மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து