முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் இயந்திர திறன் பரிசோதனை வெற்றி

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2024      இந்தியா
Isro 2023-12-29

Source: provided

 

பெங்களூரு:விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் இயந்திர திறன் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்தியா விண்வெளி துறையில் பல அரிய சாதனைகளை படைத்துள்ளது. நிலவுக்கு சந்திரயான் விண்கலம், சூரியனுக்கு ஆதித்யா-எல்1 விண்கலம் ஆகியவற்றை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இதேபோன்று, விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் ககன்யான் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம், மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப கொண்டு வருவது ஆகும். நடப்பு ஆண்டில் இலக்கை அடைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும்.

இந்த நிலையில், விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. இதனால், ககன்யான் திட்டத்தில் பெரிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம். இதுபற்றி இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், இஸ்ரோவின் சி.இ.20 கிரையோஜெனிக் இயந்திரம் தற்போது, ககன்யான் திட்டங்களுக்காக விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்ல கூடிய திறன் பெற்றுள்ளது என்று தெரிவித்து உள்ளது.

கடுமையான பரிசோதனைகள் இயந்திரத்தின் உறுதி தன்மையை நிரூபித்து உள்ளது. முதல் ஆளில்லா விமானம் எல்.வி.எம்.3 ஜி1-க்காக அடையாளம் காணப்பட்ட சி.இ.20 இயந்திரம், ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை கடந்து வந்துள்ளது. அதிக உயரத்தில் பரிசோதனை செய்வதற்கான வசதி கொண்ட, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவன வளாகத்தில் கடந்த 13-ந்தேதி, இறுதி பரிசோதனை நடந்தது. 7-வது முறையாக நடந்த இந்த தொடர் பரிசோதனையின்படி, வெற்றிடத்தில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், இயந்திரம் ஆனது வெப்பப்படுத்தி பார்க்கப்பட்டது. அது பறக்கும் நிலையை தூண்டுவதற்கானது என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, சி.இ.20 இயந்திரம் மனிதர்களை சுமந்து செல்வதற்கான தரைப்பகுதி தகுதி பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அதில், உயிர்வாழ்வதற்கான விளக்க பரிசோதனைகளும் நடந்தன. நீடித்து உழைக்க கூடிய பரிசோதனைகள் மற்றும் செயல்பாட்டு திறன் பரிசோதனை, குறைந்த அளவிலான இயக்கத்தின் கீழ் அதன் செயல்பாடு என அனைத்து தரைவழி பரிசோதனைகளும் நிறைவடைந்து அதில் வெற்றியும் கிடைத்துள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து