முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

சனிக்கிழமை, 18 மே 2024      தமிழகம்
Kurtalam-Falls 2024-05-18

Source: provided

நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

நெல்லை மாவட்டத்தில் கோடை மழை ஒரு சில பகுதிகளில் கனமழையாகவும், சில இடங்களில் சாரலாகவும் பெய்து வருகிறது.  சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்கிறது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை நீடித்து வரும் நிலையில், நேற்று முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே அங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வரை பழைய குற்றாலம் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

உடனே சுற்றுலா பயணிகள் அனைவரும் அருவியில் இருந்து வெளியேறிய நிலையில் வெள்ளம் திடீரென அருவியின் படிக்கட்டு பகுதிகளிலும் நிரம்பி ஓடியது. இந்த வெள்ளப் பெருக்கின்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தான். 

தீயணைப்பு துறையினர் அவரது உடலை சுமார் 500 அடி தூரத்தில் பாறை இடுக்கில் மீட்டனர்.  தொடர்ந்து பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு கலெக்டர் தடை விதித்தார். மேலும் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் யாரும் அருவிக்கரைக்கு வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  

இதற்கிடையே மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றாலம் அருவியின் அருகே இரும்பு பேரிகார்டுகள் வைக்கப்பட்டு அருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது. 

மேலும் பாதுகாப்புக்காக அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து