Idhayam Matrimony

டெஸ்ட் தொடர் குறித்து சிராஜ்

செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2025      விளையாட்டு
Muhammad-Siraj 2023-09-17

Source: provided

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்த டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் நாங்கள் விளையாடவுள்ள மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடராகும். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இருப்பினும், எங்களால் இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் மிகவும் நன்றாக செயல்பட்டோம். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம். தனிப்பட்ட விதத்தில் நான் மிகவும் நன்றாக பந்துவீசுவதாக உணர்கிறேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதனைத் தொடர விரும்புகிறேன். வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடுவது என்னுடைய பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்ள உதவும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சவாலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

_________________________________________________________________________________________________________________________

ஜம்மு காஷ்மீர் அணி சாதனை

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜம்மூ காஷ்மீர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் தோசேஜா 65 ரன்கள் எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகுப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய காஷ்மீர் அணி 310 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பராஸ் டோக்ரா 106 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் சிமர்ஜீத் சிங் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 99 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய டெல்லி அணி 277 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து விளையாடிய காஷ்மீர் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

_________________________________________________________________________________________________________________________

நேரு ஸ்டேடியத்தை இடிக்க முடிவு

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் கட்டப்பட்ட ஆண்டிலேயே அங்கு ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறியது. சர்வதேச தடகள போட்டி நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட இந்த ஸ்டேடியத்தில் கால்பந்து மைதானமும் உள்ளது. 1984, 1991-ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் பிறகு இந்த மைதானம் கிரிக்கெட் போட்டிக்கு பொருத்தமானதாக இல்லை என கூறி வேறு இடத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சமீபத்தில் உலக பாரா தடகள போட்டி நடந்தது. இந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தை இடிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடகளம் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான எல்லா வசதிகளும் இருக்கும் வகையில் விளையாட்டு நகரத்தை வடிவமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

_________________________________________________________________________________________________________________________

ராஜஸ்தானுக்கு ஜடேஜா கேப்டன்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்லவிருக்கும் ரவீந்திர ஜடேஜா அந்த அணிக்கு கேப்டாகுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக, ஐபிஎல் தொடரில் சாம்சன் - ஜடேஜா பரிமாற்றங்கள்தான் பேசுபொருளாக இருக்கின்றன. சிஎஸ்கேவில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா (37 வயது) ராஜஸ்தானுக்கும், அங்கிருக்கும் சஞ்சு சாம்சன் (31 வயது) சிஎஸ்கே அணிக்கும் மாறுவதாகக் கூறப்படுகிறது.இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகுவார் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜடேஜா, மீண்டும் சொந்த மண்ணின் அணியில் விளையாடி ஓய்வை பெற இது நல்ல வாய்ப்பாக இருக்குமெனவும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தினை கூறியுள்ளார்கள். சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவின் மாற்றத்தை ஏற்க முடியாமல் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 254 ஐபிஎல் போட்டிகளில் 3,260 ரன்கள் குவித்துள்ளார். 170 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டார். இந்நிலையில், ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக மாறினால் அவரது கிரிக்கெட் பயணத்திற்கு நல்ல மாற்றமாக இருக்குமென முன்னாள் வீரர்கள் கருத்துள்ளார்கள். 

_________________________________________________________________________________________________________________________

ரிச்சா பெயரில் கிரிக்கெட் திடல்

13-வது ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற  இந்திய மகளிர் அணியில் இடம்பெற்ற மேற்கு வங்கத்தின் சிலிகுரியைச் சேர்ந்த 22 வயதான விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷை கௌரவப்படுத்தும் விதமாக டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டது. மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி, முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் ஈடன் கார்டன் கிரிக்கெட் திடலில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், ரிச்சா கோஷுக்கு ரூ. 34 லட்சம் பரிசுத் தொகை, வங்க பூஷண் விருது வழங்கி முதல்வர் மமதா பானர்ஜி, அவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, டிஎஸ்பி பணிக்கான நியமனக் கடிதத்தையும் வழங்கினார். மேலும், முதல்வர் மமதா பானர்ஜி மேடையில் பேசுகையில், “ரிச்சாவுக்கு வாழ்த்துகள். அவர் 22 வயதிலேயே உலகச் சாம்பியன் ஆகிவிட்டார். சந்த்மோனி பகானில் 27 ஏக்கர் நிலத்தில் ஒரு கிரிக்கெட் திடல் கட்டப்படவுள்ளது. அதற்கு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிரணி வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரிடப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் திடல்கள் பெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி, அருண் ஜேட்லி, நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களையே கொண்டுள்ளன. அதேவேளையில், இந்தியாவில் உள்ள கிரிக்கெட் திடல்களின் ஸ்டாண்டுகளுக்கு மட்டுமே கவாஸ்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண், சச்சின், தோனி, கோலி, சேவாக் போன்ற விளையாட்டு வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் திடல் கட்டப்பட்டு, அதற்கு ரிச்சா கோஷின் பெயர் சூட்டப்பட்டால், இந்தியாவில் ஒரு வீரர் / வீராங்கனையின் பெயரில் உள்ள முதல் கிரிக்கெட் திடல் என்ற சிறப்பை இந்தத் திடல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து