கூட்டுக்குழு அமைக்கும் விவகாரம் - பணிந்தது மத்திய அரசு

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      இந்தியா

 

புதுடெல்லி, பிப்.19-

கூட்டுக்குழு அமைக்கும் விவகாரம் - பணிந்தது மத்திய அரசு  - 23-ம் தேதி அறிவிப்பு வெளியாகும்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வரும் 23 ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமான தி.மு.க. மாஜி மந்திரி ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கடந்த குளிர்கால பாராளுமன்ற தொடரே நடைபெறாமல் முடங்கிப்போனது. இந்நிலையில் வரும் 21 ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது. 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28 ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கிடையில் இந்த கூட்டத் தொடரையாவது சுமூகமாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது. அதன்காரணமாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்கவும் மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. அதன்படி பாராளுமன்ற கூட்டுக்குழு அமைப்பது பற்றிய அறிவிப்பு வரும் 23 ம்தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த தகவலை மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார். கூட்டுக்குழு அமைப்பது பற்றிய அறிவிப்பு 23 ம் தேதி வெளியாகும் என்று அவர் கூறியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: