முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் பல்கலைக் கழகமாக வி.ஐ.டி. பல்கலைக்கு சான்றிதழ்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.23 - இந்தியாவிலேயே முதல் பல்கலைக்கழகமாக வேலூரில் உள்ள வி.ஐ.டி.பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்காவின் உயரிய விருதான அபெட் சான்றிதழ் கிடைத்துள்ளது. அமெரிக்க தூதர் ஜெனீபர் மெக்கன்டையர் இந்த சான்றிதழை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதனிடம் நேற்று வழங்கினார். அமெரிக்காவைச்சேர்ந்த அபெட் (என்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி தரச் சான்றிதழ் வாரியம்) என்ற அமைப்பு உலகம் முழுவதிலும் என்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி துறையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களையும் அவர்கள் வழங்கி வருகின்ற பாடத்திட்டத்தையும் கருத்தில் கொண்டு தரச்சான்றிதழ் வழங்கி கெளரவித்து வருகிறது.

இதன்படி வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகம் கடந்த 2009ம் ஆண்டில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் மிகச்சிறந்து விளங்குவதாக அபெட் சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதே போல் இந்த கல்வி ஆண்டில் ஈ.சி.ஈ. மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளில் சிறந்து விளங்குவதற்காக அபெட் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அமெரிக்காவில் மேரிலாண்டில் பால்டிமோர் என்ற இடத்தில் உள்ள அபெட்  என்ற சமூகநல அமைப்பு வி.ஐ.டி. பல்கலைக்கழகம் வழங்கிவரும் பாடத்திட்டங்களையும், பல்கலைக்கழகத்தின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து இந்த சான்றிதழை அளிக்கிறது.

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் அமெரிக்க தூதர் ஜெனீபர் மெக்கன்டையர் இந்த சான்றிதழை வி.ஐ.டி.வேந்தர் ஜி.விஸ்வநாதனிடம் வழங்கி, பல்கலையின் சேவைகளை பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் முக்கிய அம்சமாக திகழ்வது கல்வித்திட்டங்களாகும். இருநாட்டு மாணவர்களுக்கு இடையேயான புல்பிரைட்-நேரு ஸ்காலர்ஷிப் பெறும் நபர்களில் இந்தியர்களே அதிகம். இதுவரை ஏறக்குறைய 17 ஆயிரம் பேர் ஸ்காலர்ஷிப் பெற்றுள்ளனர். 

ஒபாமா-மன்மோகன்சிங் ஆகியோர் 2009ல் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் கல்வித்திட்ட மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு அங்கமாக இன்று சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று வி.ஐ.டி. பல்கலைக்கு அபெட் சான்றிதழ் வழங்குவதை பெருமையாக கருதுகிறேன்.

இவ்வாறு அமெரிக்க தூதர் ஜெனீபர் மெக்கன்டையர் கூறினார்.

முன்னதாக விழாவின் துவக்கத்தில் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விஸ்வநாதன் வரவேற்றார். முடிவில் துணைவேந்தர் வி.ராஜூ நன்றி கூறினார். 

இவ்விழாவில் வி.ஐ.டி.பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி.வி.சம்பத், சேகர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!