முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் பேரரசருக்கு இதய அறுவை சிகிச்சை

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

டோக்கியோ, பிப். - 20 - ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.  78 வயதான அகிஹிட்டோ பூரண நலன் பெற ஆயிரக்கணக்கானவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். டோக்கியோ பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன. பேரரசர் இப்போது தீவிர கண்காணிப்பு பிரிவில் இருப்பதாகவும் தெரிவித்தன. ஓராண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அகிஹிட்டோவின் இதயத்துக்கு செல்லும் இரத்த குழாய்களில் ஒன்று சுருங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் அகிஹிட்டோவுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்தே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் இருவார காலத்துக்கு மருத்துவமனையின் பராமரிப்பிலேயே பேரரசர் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரரசர் பூரண நலம் பெற்று திரும்பும் வரை அவரது மூத்த புதல்வரும், பட்டத்து இளவரசருமான நருஹிட்டோ பேரரசரின் பொறுப்புகளை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் 1989 ம் ஆண்டு ஜப்பானின் பேரரசராக அகிஹிட்டோ பதவியேற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!