முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணுமின்நிலையம் விரைவில் திறக்கப்படும்: - நாராயணசாமி

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச் - 4 - கூடங்குளம்  அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும்  என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .மத்திய அமைச்சர்  நாராயணசாமி நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறார். தமிழக அரசு நியமித்த நிபுணர் குழுவும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறி இருக்கிறது. இந்த அணுமின் நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பு கொண்டது என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். எனவே போராட்டம் நடத்துபவர்கள் இதை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பணம் செலவு செய்வதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி நடந்த விசாரணையில், வாகனங்களில் மக்களை அழைத்து வருவது, உணவு வழங்குவது போன்றவற்றுக்காக ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த பணம் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுவதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 12 தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன. கணக்கு தணிக்கையின்போது 6 அமைப்புகளின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதில் 3 நிறுவனங்கள் பணத்தை முறைகேடாக செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 3 நிறுவனங்கள் மீதும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகளை சி.பி.ஐ.யும், 2 வழக்குகளை தமிழக அரசும் பதிவு செய்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.   உலகின் பல்வேறு நாடுகளில் அணு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் அணு உலை மூலம் தயாராகிறது. சீனாவில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. பிரான்சில் 68 சதவீதமும், ஜப்பானில் 26 சதவீதமும், ரஷ்யாவில் 20 சதவீதமும், தென்கொரியாவில் 10 சதவீதமும் அணு உலை மூலம்தான் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 20 அணுமின் உலைகள் உள்ளன. இதில் 19 உலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் 4 ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவீதம்தான். பாகிஸ்தானில் சீனா உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இந்தியாவில் ராஜஸ்தான், கர்நாடகா, அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. சூரிய ஒளி மூலம் 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க 16 ரூபாய் செலவாகிறது. அனல்மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்க 3 ரூபாய் 60 காசும், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க 6 ரூபாயும் செலவு ஆகிறது. அணுமின் நிலையம் மூலம் மின்சாரம் தயாரிக்க 2 ரூபாய் 45 காசுதான் செலவு ஆகிறது. அணுமின் நிலையம் பாதுகாப்பானது. குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டுக்கு அணு மின்சாரம் மிகவும் அவசியம் என்று எடுத்துக் கூறியபோதும் உள்நோக்கத்துடன் நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தியவர்கள் மீது 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டம்​ ஒழுங்கை காப்பது மாநில அரசின் பிரச்சினை. இதில் மத்திய அரசு தலையிடாது.  கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறிப்பு பற்றி மத்திய​மாநில அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல் படத்தொடங்கும். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சுற்றுலா விசாவுடன் தமிழ் நாட்டுக்கு வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்தது. அவர் கூடங்குளம் அணுஉலை போராட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அவருடைய லேப்டாப் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது லேப்டாப்பில் கூடங்குளம் அணுஉலை படம் இருந்தது. மேலும் தேவைப்பட்டால் அவரை அழைத்து வந்து விசாரிப்போம். போராட்டம் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.750 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையும் இதுதான். நானும் மத்திய மந்திரி ஜி.கே. வாசனும் இதுபற்றி பிரதமரிடம் கூறி இருக்கிறோம். இலங்கையில் மட்டும் அல்ல உலகில் எந்த பகுதியில் மனித உரிமை மீறப்பட்டாலும் மத்திய அரசு அதை எதிர்க்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர்  நாராயணசாமி கூறினார். பேட்டியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உடன் இருந்தார். அவரும் இதே கருத்தை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்