திருச்செந்தூரில் மாசித்திருவிழா எட்டாம் நாளில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திங்கட்கிழமை, 5 மார்ச் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செந்தூர், மார்ச் - 5 - திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா எட்டாம் நாளை முன்னிட்டு நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருக்கோயில் தேரோட்டம் நாளை காலை நடக்கிறது.திருச்செந்தூர் கோயிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஏழாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலைசுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். எட்டாம் திருவிழாவான நேற்று காலை சுவாமி வெள்ளைச்சாத்தி வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளினார். காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று காலை 11.15 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளினார். நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் சுதர்சன், தக்கார் கோட்டை மணிகண்டன்,  உதவி ஆணையர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் செல்வகுமாரி, ராமசாமி, சுப்பையன், தொழிலதிபர் அரிகரமுத்து, ரமணி உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு இன்று சுவாமி; தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது..தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.  காலை 7.30 மணியளவில் மீன லக்னத்தில் தேரோட்டம் ஆரம்பித்து பிள்ளையார் ரதம்;, சுவாமி தேர், அம்மன் தேர்கள் வலம் வரும்.
தெப்பத்திருவிழா புதன்கிழமை பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு சுவாமி மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி எழுந்தருளி இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு சுவாாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தெப்பத்தில் எழுந்தருளி  11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் சுதர்சன், தக்கார் கோட்டை மணிகண்டன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பட விளக்கம்
திருச்செந்தூரில் மாசித்திருவிழா எட்டாம் நாளில் சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளிய போது எடுத்த படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: