முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் ஜெயலலிதா ஆவேச பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

திருச்சி, மார்ச் 25 - இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, இந்த ஆட்சியில் இருந்து தமிழக மக்கள் விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல் என்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார். 

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13 ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19 ம் தேதி துவங்கி நடந்துவருகிறது. இதனை முன்னிட்டு தமிழகமெங்கும் அ.தி.மு.க.வினர் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும்  தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவும், தேர்தல் பிரச்சாரத்தை துவக்கவும் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அ.தி.மு.க.வினரால் அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுவை  தாக்கல் செய்தார் ஜெயலலிதா.    

இதையடுத்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது முதல் பிரச்சாரத்தை திருச்சி ஸ்ரீரங்கம் நகரில் நேற்று மாலை 6.30 மணிக்கு திருவானைக்காவல் வீரேஸ்வரம் சந்திப்பு பகுதியில் துவக்கினார். முன்னதாக அம்மா மண்டபத்தில் இருந்து வீரேஸ்வரம் வரை வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தில் நீந்திவந்தார். இதைத்தொடர்ந்து திறந்த வேனில் மேல்புறம் அமர்ந்தபடியே, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் தனக்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் செய்து பேசினார். 

முதல்கட்டமாக ராகவேந்திரா ஆர்ச்சில் பேசியபோது, இந்ததேர்தல் பெரும்ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் அமோகமாக நடந்துள்ளது. மணல் கொள்ளைமூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கி ஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.

தமிழக அரசின் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது கருணாநிதி குடும்பம். மக்கள் பணத்தை கோடி கோடியாக கருணாநிதி குடும்பம் சுரண்டிவிட்டது. காலாவதியான மருந்து விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மக்களின் அவலம், திண்டாட்டம் பெருகிவிட்டது. ஏழைமக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு தி.மு.க கும்பல் வாங்கிவிட்டது. ரியல் எஸ்டேட் துறை கருணாநிதியின் குடும்பத்திடம் சிக்கித் தவிக்கிறது. திரைப்படத்துறை கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது. 

ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி எனக்குத் தெரியும். ஸ்ரீரெங்கநாதர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகாலமாக நிலத்தை விற்க முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். ஸ்ரீரெங்கம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பக்தர்களும் பெருமாளைத் தரிசிக்க வந்து செல்கிறார்கள். எனவே இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மின்வெட்டை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீரெங்கம் எனது பூர்வீக ஊராகும். என்னுடைய குடும்ப முன்னோர்கள் இங்குதான் பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். வளர்ந்தார்கள். எனவே ஸ்ரீரெங்கத்திற்கு நான் வந்து செல்வது எனது குடும்ப வீட்டிற்கு வந்து செல்வது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கு நான் போட்டியிடுகிறேன். எனக்கு நீங்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து பெரியார் நகர் வழியாக மாம்பழச் சாலை, அம்மா மண்டபம் வழியாக மூலத்தோப்பு கார்னர் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து உற்சாகத்துடன் வரவேற்று ஆரத்தி எடுத்தனர்.அதைத் தொடர்ந்து தெப்பக்குளம் கார்னர், மேற்குவாசல் கோபுரம் சந்திப்பு வழியாக மேலச்சித்திரை வீதிவந்தார். அங்கு அக்ரஹாரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். பின்பு வடக்கு சித்திரை வீதி, வடக்குவாசல், கீழச்சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, காந்தி ரோடு, தேவி தியேட்டர், நெல்சன்ரோடு ,திருநகர், பர்மா காலனி வழியாக டிரங்க் ரோடு வந்தார். அங்கிருந்து திருவானைக்காவல் சன்னதி தெருவழியாக நான்கு கால் மண்டபம் வழியாக பாரதி தெரு, கும்பகோணம் சாலை, சென்னை டிரங்க் ரோடு வழியாக திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை வந்தடைந்தார்.வழியில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு செண்டை மேளம், பூரண கும்பம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவற்றுடன் சிறப்பாக வரவேற்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony