முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்திற்கு எதிராக தமிழக அரசு புதிய வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 25 - காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தமிழக அரசு புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. கோடை காலத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்காமல் கர்நாடகம் கூடுதல் தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்று அதில் முறையிடப்பட்டுள்ளது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதனை விசாரிக்க காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 

இந்த நடுவர் மன்றம் தனது இடைக்கால தீர்ப்பை கடந்த 1991 ல் வழங்கியது. அதில் தமிழகத்திற்கு கர்நாடகம் 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை கர்நாடகத்தில் பதவியில் இருந்த எந்த அரசும் முறையாக அமல்படுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த 2007 ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. 

அதில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி, கேரளாவிற்கு 30 டி.எம்.சி. புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. என்ற அளவில் காவிரி நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் மேல்முறையீடு செய்தது. இடைக்கால தீர்ப்பை எவ்வாறு கர்நாடகம் அமல்படுத்தவில்லையோ, அதே போல இறுதி தீர்ப்பையும் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவர அமல்படுத்தவில்லை. 

குறிப்பாக, கோடை காலத்தில் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரே விடுவதில்லை. இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் துயருக்கு ஆளாயினர். இந்நிலையில் தமிழக அரசு கடந்த 15 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 

காவிரி நடுவர் மன்றம் 2007 ல் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதை கர்நாடகம் முறையாக அமல்படுத்த வேண்டும். தனது வாக்குறுதியை மீறி அது செயல்பட கூடாது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே போடப்பட்ட பழைய ஒப்பந்தங்களை எல்லாம் கருத்தில் கொண்டுதான் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் கோடை காலத்தில் சாகுபடி அளவை உயர்த்தி பயன்படுத்தி கொள்வதால் கிட்டத்தட்ட தண்ணீர் இல்லாத நிலைக்கு போய் விடுகிறது. இதனால் தண்ணீர் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழகம் தண்ணீரின்றி தத்தளிக்கின்ற நிலை ஏற்படுகிறது. இது காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கு எதிரானது. ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் கர்நாடகம் கூடுதல் தண்ணீரை எடுத்துக் கொள்வது என்பது சகஜமான ஒன்றாகும். எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா கூறுகையில், 

காவிரி நீர் பகிர்ந்து கொள்வது குறித்து சுப்ரீம் கோர்ட்டை தமிழகம் நாடியுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்புக்கு இணங்க நாங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவித்து வருகிறோம். கோடை காலத்தில் அணைகளில் நீர் மட்டம் மிக குறைவாக உள்ளது. இதனால் கர்நாடகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாநிலத்தின் நலனை பாதுகாக்கிற வகையில் சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இது குறித்து வரும் 26 ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்