முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தளபதி குற்றச்சாட்டு: விசாரணைக்கு அந்தோணி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 27 - ராணுவத்தளபதி வி.கே.சிங் கூறியுள்ள ஒரு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார். ராணுவத்திற்கு தேவையான வாகனங்களை கொள்முதல் செய்தபோது தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க சிலர் முன்வந்ததாக ராணுவத்தளபதி வி.கே.சிங் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான செய்தி தொலைக்காட்சி செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகியது. இதையடுத்து பாராளுமன்றத்தில் இந்த பிரச்சனையை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்கு வெளியே அந்தோணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், வி.கே.சிங் குற்றச்சாட்டு ஒரு சீரியசான விஷயம். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த விஷயம் குறித்து வி.கே.சிங் தங்களிடம் தகவல் ஏதேனும் தெரிவித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதனால் இதுகுறித்து தான் கருத்து எதையும் சொல்லமுடியாது என்று அந்தோணி தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பாக ராணுவ அமைச்சர் மற்றும் ராணுவ தளபதி உடனடியாக கருத்துகளை தெரிவித்திருக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறினார். இது ஒரு கிரிமினல் நடவடிக்கை. இதுபோன்று லஞ்சம் கொடுக்க முன்வருவோரை அனுமதிக்கவே கூடாது என்றும் அவர் கூறினார். 

இதுபோன்று உயர் அதிகாரிகள் மட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் கூறப்படும்போது அதுகுறித்து விசாரிக்க அரசு உறுதி அளிக்கிறது என்று செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். வி.கே.சிங் ஒரு சீரியஸான குற்றச்சாட்டை கூறியுள்ளார். எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அதுகுறித்து விசாரித்து விளக்கமளிக்கப்படும் என்றும் அம்பிகா சோனி கூறினார். வி.கே.சிங் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூரிடம் கேட்டதற்கு இதுகுறித்து கருத்து சொல்வது எனது கண்ணியத்திற்கு குறைவானது என்றார். 

தரம்குறைந்த 600 வாகனங்களை ராணுவத்திற்கு வாங்குவதற்காக தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க சிலர் முன்வந்தனர் என்று வி.கே.சிங் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பத்திரிகைச் செய்தி பின்னர் டி.வி.சேனல்களிலும் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்