முக்கிய செய்திகள்

வாகன சோதனைக்கு எதிர்ப்பு - வெள்ளையன் எச்சரிக்கை

Vellayan1

 

சென்னை, மார்ச் 25 - நல்ல நோக்கத்தோடு நடைபெறும் நடவடிக்கையை எதிர்த்து கடையடைப்பு என்ற கடைசி ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது, வணிகர்களின் போராட்டம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்ற வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளையன் கூறியதாவது:-

தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பணபலம் ஜனநாயகத்தை வீழ்த்தி விடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் அரசியல் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தாலும், வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் ஆணையத்தின் சோதனை நடவடிக்கைகளால் பெரிதும் வணிகர்களே பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அரசியல் கட்சியினரின் ஊழல் பணம்- பேருந்துகள், லாரிகள், பார்சல் சர்வீஸ்கள், ஆம்புலன்ஸ்கள் மூலமாக அனுப்பப்படுவதாக தெரிகிறது. அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் இது தெரியாமல்  இருக்க வாய்ப்பில்லை. 

இப்போதாவது தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினரை குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். பணம் வினியோகிக்கப்படும் இடங்களிலேயே கையும், மெய்யுமாக பிடிக்க வேண்டும். ஜனநாயகத்தை பணநாயகத்தால் வீழ்த்த நினைப்போரின் முயற்சியை முறியடிக்கும் தேர்தல் ஆணையத்தின் சீரிய செயல்பாட்டுக்கு வணிகர்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க வேண்டாம் என்று தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கேட்டுக் கொள்கிறது. வியாபாரத்திற்காக பணமோ, பொருட்களோ கொண்டு செல்லும் வணிகர்கள் தக்க ஆதாரத்துடன் கொண்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறோம். ஒரு நல்ல நோக்கத்தோடு நடத்தப்படும் நடவடிக்கைகளால் வணிகர்களாகிய நாமும் சற்றே பாதிக்கப்பட்டிருந்தாலும் அதற்காக கடையடைப்பு என்கிற கடைசி ஆயுதத்தை பயன்படுத்தப் பார்ப்பது தேவையற்றது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கருதுகிறது. 

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள்  பாதிக்கப்படாமலும், பண பலத்தைக் கொண்டு  வெற்றி பெற நினைக்கும் அரசியல் கட்சிகளின்  முகத்திரையை கிழிக்கும் வகையிலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். அதற்கான தகுந்த நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கும் என்று நம்புகிறோம். பணபலத்தை நம்புவதை விடுத்து, மக்கள் நலன் மற்றும் தேச நலன் சார்ந்த கொள்கை பலத்தால் வெற்றியை பெற முயற்சிக்குமாறு அரசியல் கட்சிகளையும் எமது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கேட்டுக் கொள்கிறது. 

வணிகர்களின் போராட்டம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைந்து விடக் கூடாது. பணபலம் முறியடிக்கப்பட்டு தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். ஆட்சியாளர்களை அரியணை ஏற்றுவதில்  வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின்பங்கு கணிசமானது. நமது வாழ்வாதாரமான சில்லரை வணிகம் காக்கப்பட எந்த குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் நமது உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றும்படி லட்சோப லட்சம் வணிகர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது. 

இவ்வாறு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: