முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களிடம் மறு விசாரணை நடத்த பத்மா நீதிபதியிடம் மனு

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஏப்.10​ - காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை கோர்ட்டில் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று நடந்த விசாரணையின்போது சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேர் ஆஜரானார்கள். வக்கீல் வாதம் நடந்தது. அப்போது சங்கரராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் திடீரென கோர்ட்டுக்கு வந்தனர். பத்மாவிடம் ஏற்கனவே சாட்சி விசாரணை முடிந்துவிட்டது. எனவே அவர் கோர்ட்டுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அவர் திடீரென கோர்ட்டுக்கு வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவர் கையில் ஒரு மனு வைத்திருந்தார். கோர்ட்டு ஊழியர்களிடம் நான் வழக்கை விசாரித்து வரும் திபதி முருகனை சந்திக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இப்போது முடியாது என்று ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே பத்மாவும், அவருடைய மகனும் கோர்ட்டின் வெளியே நீண்ட நேரம் காத்து இருந்தனர். அவர்கள் வக்கீல் யாரையும் அழைத்து வரவில்லை.

இருவரையும் நீதிபதியை சந்திக்க ஊழியர்கள் அனுமதித்தனர். இருவரும் நீதிபதியிடம் ஒரு மனுவை கொடுத்தனர்.

அதற்கு நீதிபதி முருகன் எதற்காக இந்த மனுவை தருகிறீர்கள் என்று கேட்டார். இந்த கொலை வழக்கில் மறு விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக மனு தருகிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து நீதிபதி இருதரப்பு வக்கீல்களின் கருத்துக்களை கேட்டார். பின்னர் இன்று இந்த மனு மீது விசாரணை நடத்துவதாக அறிவித்தார். பின்னர் பத்மா, ஆனந்த் சர்மா ஆகிய இருவரும் வெளியே வந்தார்கள்.

அப்போது ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:​

எங்கள் தந்தை கொலை நடந்தபோது நான், எனது தாயார் பத்மா, சகோதரி உமா மைத்ரேயி ஆகியோர் வாக்குமூலம் கொடுத்தோம். அதில் உண்மையான வாக்குமூலத்தை கூறியிருந்தோம். ஆனால் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது எங்களை 3 பேர் மிரட்டினார்கள். இதனால் உயிருக்கு பயந்து நாங்கள் 3 பேரும் சாட்சியத்தை மாற்றி கூறினோம்.

எனவேதான் எங்கள் 3 பேரிடமும் மறுபடியும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளோம். இந்த மனுவை கடந்த மாதமே ஐகோர்ட்டில் கொடுக்க சென்றோம். ஆனால் விசாரணை நடக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி அவர்கள் தெரிவித்தனர். எனவே இங்கு மனுவை கொடுத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்