முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் கண்டுகளிக்க குளுகுளு வசதி

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, ஏப். - 19 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் வவும் 23 ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தினமும் மாசி வீதிகளில் அம்மன், சுவாமி திருவீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 30 ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், மே மாதம் முதல் தேதியில் அம்மனுக்கு திக் விஜயமும் நடைபெறும். 2 ம் தேதி மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்துக்காக திருக்கோயில் வளாகத்தில் வடக்கு, கிழக்காடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபம் கருங்கல்லால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கல்யாணத்தை காண கடந்த ஆண்டு ஏறத்தாழ 18 ஆயிரம் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக 4 வண்ணங்களில் நுழைவு சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் நுழைவு சீட்டுகள் அச்சடிக்கப்படவுள்ளதாகவும், கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். திருக்கல்யாண பந்தலில் வழக்கமாக மின் விசிறிகள் அமைக்கப்படும். மண்டபத்தின் பின்பகுதியில் இருப்பவர்கள் திருக்கல்யாண காட்சிகளை காண்பதற்கு ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படும். இந்த ஆண்டு முதன் முறையாக குளிர்சாதன வசதி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருக்கல்யாண மண்டபம் மற்றும் பக்தர்கள் அமரும் பகுதியில் 100 டன் அளவு குளிர்சாதனம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கு தனியார் நிறுவனம் உதவ முன்வந்துள்ளதாகவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். குளிர்சாதன வசதிக்காக 320 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் வசதியும் செய்யப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. இது குறித்து கோயில் செயல் அலுவலர் ஜெயராமன் கூறியதாவது, திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தர்கள் அமர்வதற்குரிய பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்தர்களுக்குரிய வசதிகள் அனைத்தையும் நிறைவேற்ற திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செயல் அலுவலர் ஜெயராமன் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 3 ம் தேதி மாசி வீதிகளில் நடைபெறும். 4 ம் தேதி உச்சிகால பூஜையுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்