முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகிரி ஆதரவாளர்கள் விளக்கம்: அன்பழகன் ஆலோசனை

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - மு.க. அழகிரி ஆதரவாளர்கள் விளக்கம் குறித்து தி.மு.க. நிர்வாகிகளுடன் அன்பழகன் ஆலோசித்ததாக .கூறப்படுகிறது. மதுரையில் கடந்த 15​ந்தேதி நடந்த தி.மு.க. இளைஞரணி நேர்காணல், மற்றும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்ள வில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நிர்வாகிகள் 17 பேருக்கு நோட்டீசு அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு 10​க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பதில் அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:​

 மத்திய மந்திரியும் தென் மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் மதுரையில் இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சி வேண்டாம் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வில்லை.

இளைஞரணி நேர்காணல் நடத்தப்பட்டபோது மு.க.அழகிரியின் பெயரை முன்னிலை படுத்தவில்லை. இது வருத்தம் அளிக்கிறது.

தலைவராக இருந்தாலும் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துவிட்டுத்தான் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். ஆனால் தென் மண்டல அமைப்பு செயலாளராக உள்ள மு.க.அழகிரியிடம் தெரிவிக்காமல் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தி.மு.க.வுக்கு சோதனைகள் வந்தபோதெல்லாம் கட்சியை வளர்த்த மு.க.அழகிரியிடம் தெரிவிக்காமல் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்தது தவறு.

தலைமையே அழகிரியை கேட்காமல் மு.க.ஸ்டாலின் கூட்டத்தை அறிவித்தது. இது மு.க.அழகிரியை அவமதிப்பதாகும். எனவே கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞர்களை தடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடு படவில்லை.

மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொள்ளதாததற்கு விளக்கம் கேட்டு அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நோட்டீசு அனுப்பியுள்ளார். இது தவறு. எங்களிடம் தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி அல்லது பொது செயலாளர் அன்பழகன்தான் விளக்கம் கேட்டிருக்கவேண்டும்.

எனவே எங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு வரும் காலங்களில் அண்ணன் மு.க.அழகிரிக்கு உரிய முக்கியத்துவத்தை தர வேண்டும்.

இவ்வாறு அழகிரி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

தாங்கள் அனுப்பியுள்ள இந்த விளக்கம் குறித்து மு.க.அழகிரியிடமும் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளை புறக்கணித்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள் அளித்த விளக்கம் குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. துணை பொது செயலாளர் துரைமுருகன் இன்று அன்பழகனை சந்தித்தார். அப்போது மு.க.அழகிரி, ஆதரவாளர்கள் அளித்துள்ள விளக்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது போல் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளுடனும் அன்பழகன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்