முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்துகளை சரிபார்த்த பின் கனிமொழிக்கு எதிராக வழக்கு

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.28 - டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் தி.மு.க எம்.பி. கனிமொழி சார்பில் அவரது சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களை சரி பார்த்த பின் அவருக்கு எதிராக வழக்கு தொடர அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கனிமொழியின் வங்கி கணக்கு அறிக்கை, கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்குகள் தனிப்பட்ட முறையில் அவர் செய்த முதலீடுகள், பங்கு பத்திரம் உள்ளிட்ட நிதி ஆதார ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அவருக்குள்ள குற்றவியல் தொடர்புகள் குறித்து சி.பி.ஐ.யும், சட்டவிரோத நிதி பரிமாற்றம் பற்றி மத்திய அமலாக்கத்துறையும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் கனிமொழி சார்பில் அவரது சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களை சரிபார்த்த பின் அவருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து அமலாக்கத்துறை முடிவு செய்யும். 

கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய சரத்குமாரிடமும் ஆவணங்கள் கோரி நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அப்போதைய மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா சலுகை காட்டியதாக கூறப்படுகிறது. 

இந்த விவகாரத்தில் பலன் அடைந்ததற்கு கைமாறாக தி.மு.க. ஆதரவு பெற்ற கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ. 214 கோடியை வழங்கியதாகவும், சி.பி.ஐ. நடத்திய விசாரணை நெருக்கடியால் அந்த தொகையை கடனாக பெற்றது போலவும், பின்னர் அந்த தொகையை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கே திரும்ப அளித்தது போலவும் கணக்கு காட்டப்பட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் சில காலம் இயக்குனராக இருந்த தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமார் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆண்டு சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் நிதி பரிமாற்ற விவகாரத்தில் கனிமொழியிடம் சில ஆவணங்களை கோரி மத்திய அமலாக்கத்துறை கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்