மதுரைமண்ணில் இருந்து சென்னைக்குவந்து திருப்பத்தை ஏற்படுத்தினோம்

Image Unavailable

சென்னை, மே.- 2 - கலை எந்த இலக்கண கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காது என்று பட விழாவில் இயக்குனர் பாரதி ராஜா கூறினார். தேனி சின்ன மாயன் பிலிம்ஸ் சார்பில் உருவாகும் படம் கிழக்கு பாத்த வீடு இந்த படத்தை எஸ்.பி.பாலகுருசாமி இயக்கியுள்ளார். சின்னமாயன், ஜெகன் இணைந்து தயாரித்துள்ளனர். மரியா மனோகர் இசையமைத்திருக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். புதுமுகம் பரதன் தமலி நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.வெங்கடேஷ், கவிஞர் வைரமுத்து, கலைப்புலி தாணு, தருண்கோபி என பலர் கலந்துக் கொண்டனர். இசைத்தட்டை இயக்குனர் பாரதிராஜா வெளியிட, தாணு பெற்றுக் கொண்டார்.  பின்னர் பாரதிராஜா பேசியதாவது:- சினிமாவிற்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் எங்கள் காலத்தில் இருந்ததைவிட இப்போது சினிமா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பாக விஞ்ஞான வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. கிராமத்துக்கதையை படமாக்க ஸ்டூடியோவில் உழவன் கழுத்தில் ஏர்கலப்பையை சுமந்தப்படி ஓவியம் வரைந்திருப்பார்கள் பெயிண்ட் வாடைதான் வீசும். சாணி வாடை வீசாது. இதில் என்ன எதார்த்தம் இருக்கிறது என்று யோசிப்பேன். அதற்கு பிறகுதான் உதவியாளராக இருந்து வெளியேறினேன். கிராமங்களின் வாடையை அப்படியே படம் பிடித்தேன்.
இப்போது வரக்கூடிய இளைஞர்கள் கிராமங்களை அழகாக காட்டுகிறார்கள். மதுரை மண்ணிலிருந்து நான், இளையராஜா, வைரமுத்து ஆகியோர் சென்னை வந்து சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினோம். மதுரை மண் சினிமாவுக்கு நிறைய படப்பாளிகளை கொடுத்திருக்கிறது. அந்த வகையில்  இந்த படத்தின் இயக்குனர் பாலகுருசாமி வெற்றி பெறுவார். கலை எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காது. கலைஞனுக்கும் கட்டுப்பாடு கிடையாது. ஒரு வட்டத்துக்குள் இருக்க வேண்டும் என்கிற அவசியம் கூடாது. கலை உனக்கு மட்டும் சொந்தமல்ல உலகிற்கே சொந்தமானது. எதார்த்தத்தை சொல்லுகிறவன் சினிமாவில் ஜெயிக்க முடியும். அப்போதெல்லாம் சினிமாவுக்கு வருகிறவர்கள் வெறும் பையோடு வந்து பணப்பையோடு சென்று இருக்கிறார்கள். அதுபோல இந்தபட தயாரிப்பாளரும் செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

படவிளக்கம்
கிழக்கு பார்த்த வீடு இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா, வைரமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ