முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பானர்ஜி, ஹிலாரிகிளிண்டன் முக்கிய பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 8 மே 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மே - 8 - கொல்கத்தா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்துப் பேசினார்.  டைம்ஸ் இதழில் வெளியிடப்பட்ட உலகின் சக்திவாய்ந்த 100 மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஹிலாரியும், மேற்குவங்க முதல்வர் மம்தாவும். கடன் சுமையில் சிக்கித் தவித்து வரும் மேற்கு வங்க மாநிலத்திற்கு பெருமளவிலான அமெரிக்க முதலீடுகளைக் கவர இந்த வாய்ப்பை மம்தா பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய சந்திப்பின்போது மம்தாவிடம் நமஸ்தே என்று கூறிய ஹிலாரி கிளிண்டன், கைகூப்பி கும்பிட்டும் பின்னர் கை குலுக்கியும் அவரை ஆச்சரியப்படுத்தினார். முன்னதாக சந்திப்பு குறித்து ஹிலாரி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சில்லறை வணிகத்தில் இந்தியாவில் பெருமளவிலான சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை தான் வலியுறுத்தப் போவதாக கூறினார். சில்லறை வணிகத்தில் 51 சதவீத அளவுக்கு நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, மம்தா பானர்ஜிதான் அதைத் தலையிட்டு நிறுத்தி வைக்கச் செய்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே ஹில்லாரியின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. அதுகுறித்து அவர் மம்தாவிடம் முக்கியமாகப் பேசுவார் என்று தெரிகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சில்லறை வணிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. வணிகர்களுக்கு மம்தாவும் தீவிரஆதரவு தெரிவித்து வருகிறார். எனவே இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுதவிர டீஸ்ட்டா நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் குறித்தும் ஹில்லாரியும், மம்தாவும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம் இடையிலான இந்த ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் மம்தா பானர்ஜியின் கடும் எதிர்ப்பு காரணமாக இதை நிறுத்த வேண்டியதாயிற்று.எனவே ஹில்லாரியின் சந்திப்பானது, இந்திய அரசு மற்றும் வங்கதேச அரசுகளின் சார்பில் மம்தாவுக்கு விடப்படும் தூதாகவும் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட இந்திய, வங்கதேச அரசுகளின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அந்த அரசுகளின் சார்பில் மம்தாவிடம் ஹிலாரி பேசி சரி செய்ய முயற்சிப்பது போலவும் தெரிகிறது.கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் டெல்லி செல்கிறார் ஹிலாரி. அங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்