முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லையாம்

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மே. 25 - பெட்ரோல் விலை உயர்வு பற்றிய முடிவை எண்ணெய் கம்பெனிகள்தான் எடுத்தன. இதில் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை என்கிறார் காங்கிரஸ் மேலிட பிரதிநிதி ரஷீத் ஆல்வி. மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்றைக்கு பதவியேற்றதோ, அன்றைய நாள் முதல் பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டு வருகிறது. இவர்களது 8 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை 80 முறைக்கும் மேல் பெட்ரோல் விலைகள் உயர்த்தப்பட்டு விட்டன. அப்படி உயர்த்தும் போதெல்லாம் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து விட்டது. சர்வதேச நிலைமை மோசமாகி விட்டது என்று சொல்லிச் சொல்லியே பெட்ரோல் விலையை உயர்த்தி வந்தது மத்திய அரசு. பிறகு ஒரு கட்டத்தில் விலையை நிர்ணயிக்கும் உரிமையையும் எண்ணெய் கம்பெனிகளுக்கே தாரைவார்த்து கொடுத்து விட்டது மத்திய அரசு. அப்படி செய்தால்தான் பழிபாவத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று கருதியோ என்னவோ, விலை நிர்ணய உரிமையையும் தாரை வார்த்து கொடுத்து விட்டது மத்திய அரசு.
கச்சத்தீவையே இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர்கள்தான் இவர்கள். அப்படிப்பட்டவர்கள் விலை நிர்ணய உரிமையை தாரை வார்த்து கொடுத்ததில் ஆச்சரியமில்லை. இதனிடையே நேற்று முன்தினம் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதாவது ஒரு லிட்டருக்கு ரூ. 7.54 வீதம் உயர்த்தப்பட்டது. இது உடனடியாக அமலுக்கும் வந்து விட்டது. இந்த விலை உயர்வை கேள்விப்பட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். காரணம், இப்படி ஒரு கடுமையான விலை உயர்வை இந்திய மக்கள் கேள்விப்பட்டதே இல்லை. விலை உயர்வு பற்றி கேள்விப்பட்டதுமே நடுத்தர மக்கள் பெட்ரோல் பங்க்குகளுக்கு அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். முடிந்தவரை தங்கள் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டார்கள். இன்று ஒரு நாளாவது மிச்சப்படட்டுமே என்ற நினைப்பில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தவம் கிடந்து நீண்ட நேரம் நின்று முடிந்தவரை பெட்ரோலை நிரப்பிக் கொண்டார்கள். இன்னும் பலர் பேசாமல் வாகனங்களை வீட்டில் நிறுத்தி விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கே வந்து விட்டார்கள். இன்னும் சிலர் நடடா ராஜா நடடா என்று நடக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த புண்ணியம் எல்லாம் மத்திய அரசையே சாரும். ஆனால் காங்கிரஸ் என்ன சொல்கிறது. இதற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லையாம். இப்படி சொல்கிறது காங்கிரஸ் கட்சி. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பிரதிநிதி ரஷீத் ஆல்வி டெல்லியில் கூறியதாவது,
ரூ. 7.50 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது கடினமான ஒரு முடிவுதான். ஆனால் இந்த முடிவை எடுத்தது எண்ணெய் கம்பெனிகள்தான். இதில் அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லை. எண்ணெய் கம்பெனிகளே முடிவெடுத்து அறிவித்து விட்டன. அதற்கும் காரணம் இருக்கிறது. சர்வதேச பொருளாதார நிலவரம், அமெரிக்க டாலருக்கு ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது, இப்படி பல காரணங்கள். இந்தியாவும் சர்வதேச நிலைமையால் பாதிக்கப்பட்டு விட்டது. அதனால்தான் எண்ணெய் கம்பெனிகள் இப்படி விலையை உயர்த்தி விட்டன. இவ்வாறு கூறி அந்த கம்பெனிகளுக்கு வக்காலத்து வாங்கி பேசினார் ரஷீத் ஆல்வி. ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைவரும் மத்திய அரசை கிழிகிழியென்று கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஒரு படி மேலே போய் மக்கள் வடிக்கும் கண்ணீர் உங்களை சும்மா விடாது என்று சாபமே விடுத்து விட்டார். ஆனால் மத்திய அரசு அதைப்பற்றி கவலைப்படுமா, நிச்சயமாக இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்