முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதர்ஷ் ஊழல்: மகராஷ்டிர முன்னாள் முதல்வர்களிடம் சி.பி.ஐ. விசாரணை

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

மும்பை, ஜூன். - 7 - ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழலில் மகராஷ்டிர முன்னாள் முதல்வர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெறுவதாக மும்பை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவருமே இப்போது மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.  கார்கில் போரில் உயரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க மகராஷ்டிரத்தில் ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால் இதில் 40 சதவீதம் வீடுகள் மட்டும் பயனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது. மீதியுள்ளதை அரசியல்வாதிகளும், ராணுவ அதிகாரிகளும் பகிர்ந்து கொண்டார்கள் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. மும்பை ஐகோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அதில் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கில் மத்திய அமைச்சர்கள் தேஷ்முக், ஷிண்டே, மகராஷ்டிரா மாநில அமைச்சர் சுஷில் தாக்கரே ஆகியோரின் பங்கு குறித்து முழுமையாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை வரும் 15 ம் தேதி தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் சி.பி.ஐ. கூறியுள்ளது.  முன்னதாக, சமூக ஆர்வலர் பிரவீண் வடேகோன்கர் ஆதர்ஷ் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில் தேஷ்முக் 2 வீடுகளை பெற்றது, ஷிண்டே உள்ளிட்ட பிற அரசியல்வாதிகளுக்கு இதில் உள்ள தொடர்பு குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையை ஆதாரமாக கொண்டு விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு செய்தார். இதையடுத்து இது தொடர்பாக பதிலளிக்குமாறு இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக குற்றச்சாட்டுகள் குறித்து தேஷ்முக், ஷிண்டே ஆகியோரிடம் சி.பி.ஐ. வாக்குமூலம் பெற்றது. அதில் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்