முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண விழாவில் பங்கேற்க வருகைதந்த ஜெயலலிதாவுக்கு கோலாகல வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 19 - இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 1006 ஜோடிகளுக்கான திருமண விழா இன்று சென்னை திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் கோயில் அருகே நடைபெற்றது. இதற்கென இந்த பகுதியில் விசேஷ பந்தலும், சிறப்பு மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது.. திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக முதல்வரை வரவேற்பதற்காக போயஸ்கார்டன் முதல் திருவேற்காடு வரையிலும் விதவிதமான வரவேற்பு பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. ஆங்காங்கே சிறிய மேடைகள் அமைத்து அங்கு இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அத்துடன் வழியெங்கும் பல்வேறு பகுதிகளில் வட்டவடிவ விசேஷ கொடிபேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. திருமணத்தை நடத்தி வைக்க வருகை தந்த தமிழக முதல்வருக்கு திருமண பந்தல் அருகிலும் நுழைவு வாயில் பகுதியிலும் பேண்ட் வாத்தியம், கேரளா செண்டை மேளம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகளுடனும், குதிரைகள் அணிவகுப்புடனும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமண பந்தலின் நுழைவு வாயிலில் வாழை மரம், தென்னையிலை மற்றும் பழ வகைகள், கூந்தல்பனை, பாக்கு மர கொத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சிறப்பு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தது.  மேடையின் இடது புறத்தில் வேத மந்திரங்கள் இசைப்பதற்கு தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது. அதன் அருகே நாதஸ்வரம், மேள தாள குழுவினர் அமர்ந்து மங்கள இசை எழுப்பினர். மேடையின் வலது புறத்தில் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் முன்புறம் மாவட்ட வாரியாக மணமக்கள் அமர வைக்கப்பட்டு இருந்தனர். மணமகள்கள் மெருன் கலர் பட்டு புடவை அணிந்திருந்தார்கள். மணமகன்கள் வெண்பட்டு வேஷ்டி, ஜரிகை துண்டு அணிந்திருந்தார்கள்.  முதல்வர் ஜெயலலிதா சரியாக 9.25 மணியளவில் மேடைக்கு வருகை தந்தார். அப்போது வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும், திருவாசகம் இசையும் பாடப்பட்டது. இதையடுத்து தலைமைச்செயலர் தேவேந்திரநாத் சாரங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.  பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சர்களிடம் மங்கல நாண்கள் அடங்கிய தட்டுக்களை வழங்கினார். அதனை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டு மணமக்கள் கையில் வழங்கினார்கள். இதையடுத்து சரியாக 9.40 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 1006 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். மேடையில் இருந்தவாறு முதல்வர் ஜெயலலிதா ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க, அறிவிக்க மணமகன்கள் மணமகள்களின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்தார்கள். பின்னர் மாலைகளை மாற்றிக்கொண்டனர். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா அட்சதை தூவி மணமக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வாழ்த்தி பேசினார். இதையடுத்து சபாநாயகர் டி.ஜெயக்குமார் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்தி விழா பேருரையாற்றினார். இறுதியாக தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலாளர் மு.ராஜாராம் நன்றி கூறினார். மணவிழாவில் தமிழக அமைச்சர் பெருமக்கள், அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிரணியினர், தொண்டர்கள், அரசு துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள், மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!