முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கு: ஜே.பி.சி விசாரணை பட்டியலில் வாஜ்பாய், ப. சிதம்பரம்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. - 5 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு தயாரித்துள்ள சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.  தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு முறைகேடாக 2 ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதால் அரசுக்கு ரூ. 1.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி.சாக்கோ தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இக் குழு அவ்வப்போது கூடி இது தொடர்பாக விவாதித்து வருகிறது.  இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக யார், யாரிடம் விசாரிக்கலாம் என்பது தொடர்பான சாட்சிகள் பட்டியலை தாக்கல் செய்தது. இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியல் தயாரிக்கும் பணியில் தான் முழுமையாக ஈடுபடவில்லை என்று கூறிய சாக்கோ, குழுவின் உறுப்பினர்களுடன் இது பற்றி கலந்தாலோசித்த பிறகே பட்டியல் இறுதி செய்யப்படும் என்றார். வரும் 10 ம் தேதி பட்டியல் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும்.  இப்பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் இடம் பெற்றிருப்பதற்கு யஷ்வந்த்சின்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வாஜ்பாயை விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் விசாரிக்க வேண்டும் என்றார் அவர். வாஜ்பாய் பெயர் இடம் பெற்றிருப்பது பற்றி கவலை தெரிவித்த சாக்கோ, அவர் பிரதமராக இருந்த போது தொலை தொடர்பு துறைக்கு பொறுப்பு வகித்ததாலேயே அவர் பெயர் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தார். வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது அப்போது தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஷக்மோகன் ராஜினாமா செய்ததையடுத்து இத்துறையை வாஜ்பாய் கவனித்தார். இந்த பட்டியலில் முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான சிதம்பரம் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுபோல் முன்னாள் அமைச்சர்கள் ராசா, ஜக்மோகன், அருண்ஷோரி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள தொலை தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுராவிடம் விசாரணை நடத்த அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் 19 ம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் போது சாட்சிகள் பட்டியல் தயாரிப்பதில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் உடன்பாடு எதுவும் செய்து கொள்ள கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் குருதாஸ் குப்தா தெரிவித்தார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்