முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப்முகர்ஜி டெல்லியில் 25-ம்தேதி பதவிஏற்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 23 - நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்த ஜனாதிபதி தேர்தல் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இவர் வரும் 25ம் தேதி பதவியயேற்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி நேற்று அவர் விடைபெற்றுக்கொண்டார்.  நாட்டின் அடுத்த புதிய  ஜனாதிபதியை  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 19 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில்  காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். இவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும்  கூட்டணியில் இல்லாத  முலாயம் சிங் தலைமையிலான  சமாஜ்வாடி, மாயாவதி  தலைமையிலான பகுஜன் சமாஜ் , ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, இடது கம்யூனிஸ்டு  கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த தேர்தலில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில்  பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர்  பி.ஏ. சங்மா போட்டியிட்டார். இந்த  தேர்தலில் 776 எம்.பி.க்களும் 4,120 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட்டனர். ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 11 லட்சம். இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின. அதாவது 8 லட்சம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்திலும்  அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களிலும்  நடந்த இந்த தேர்தலில்  வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிறகு வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன்  டெல்லிக்கு  கொண்டு செல்லப்பட்டு  வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது.  ஓட்டு எண்ணும் மையத்திற்கு ஆயுதம்  தாங்கிய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டு  எண்ணிக்கை   பிரணாப் முகர்ஜி மற்றும்  சங்மா ஆகியோரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று  காலை தொடங்கியது. முதலில் பாராளுமன்ற வளாகத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன் பிறகு மாநிலங்களின் சட்டமன்ற வளாகங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்  பிரணாப் மற்றும்  சங்மா ஆகியோரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டன. இந்த  தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்ட ஓட்டு  செல்லாது என்று  ஏற்கனவே  தலைமை  தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின்படி பிரணாப் முகர்ஜிக்கு 527 எம்.பி.க்களும், சங்மாவுக்கு 206 எம்.பி.க்களின் ஓட்டுக்களும் கிடைத்தன. மாநிலவாரியாக பிரணாப் முகர்ஜிக்கு  கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் சங்மாவிற்கு கூடுதலாக ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் கர்நாடகத்திலும் ஜார்கண்ட்டிலும் சில எம்.எல்.ஏ.க்கள் பிரணாப்பிற்கு வாக்களித்துவிட்டனர். மொத்தம் பதிவான வாக்குகளில்  பிரணாப் முகர்ஜிக்கு பெரும்பான்மையான வாக்குகள்  கிடைத்ததை அடுத்து அவர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிரணாப் முகர்ஜிக்கு 7 லட்சத்து 13 ஆயிரத்து 763 வாக்குகள் கிடைத்துள்ளன. சங்மாவுக்கு 3 லட்சத்து 15 ஆயிரத்து 987 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து முகர்ஜி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி அறிவித்தார்.
இதை அடுத்து  வருகிற 25 ம் தேதி நாட்டின் 14 வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டிலுக்கு வழி அனுப்பும் விழாவும் நடைபெற உள்ளது. பிரணாப்பின் வெற்றியை தொடர்ந்து டெல்லி மாநகரம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு  பிரதமர் மன்மோகன் சிங்,  காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தி,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரணாப் முகர்ஜிக்கு தற்போது 76 வயது ஆகிறது.  கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக  காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளில்  இருந்த பிரணாப் மத்திய  அமைச்சரவையில்  முக்கிய பதவிகளை வகித்தவர்.
மேற்கு வங்காள மாநிலத்தை  சேர்ந்த பிரணாப் முகர்ஜிக்கு அம்மாநில மக்கள் வாழ்த்த தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படடது இதுவே முதல் முறையாகும்.
பிரணாப் முகர்ஜிக்கு  உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்