முக்கிய செய்திகள்

கார் விபத்தில் இரா.ஜெயபாலன் மரணம் - ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      அரசியல்
Jaya 1

 

சென்னை, பிப்.21- கார் விபத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு கடலூர் மாவட்ட தலைவர் இரா.ஜெயபாலன் மறைவிற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் கார் மூலம் வெளியூருக்கு சென்று கொண்டிருந்தபோது, விழுப்புரம் மாவட்டம், பிடாகம் அருகே வாகனம் நிலை தடுமாறியதில் கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் இரா.ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும், தென்சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமல் டி.கண்ணா, பார் கவுன்சில் உறுப்பினர் என்.சம்பத், அ.தி.மு.க. வழக்கறிஞர் பா.ஜெயப்பிரியன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன். 

அ.தி.மு.க. உடன் பிறப்புகள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த போதிலும் இதுபோன்ற விரும்பத் தகாத நிகழ்வுகள் நடைபெற்று என் உயிரினும் மேலான விலை மதிக்க முடியாத எனதருமை அ.தி.மு.க. உடன் பிறப்புகள் உயிரிழப்பதும், காயமடைவதும் மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது. எனவே, அ.தி.மு.க. உடன் பிறப்புகள் எனது அன்பு வேண்டுகோளை ஏற்று சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று மீண்டும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

அன்பு சகோதரர் ஜெயபாலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 3 அ.தி.மு.க. வழக்கறிஞர்களும் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம்  வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: