முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகராட்சி - பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.9 - நகராட்சி, பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை 2012- 2013 -ம் ஆண்டுகளில் நிறைவேற்ற ரூ.750 கோடியை முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 15 பேரூராட்சிகளில் கட்டடங்களை கட்ட ரூ.6 கோடியும், திருநெல்வேலியில் உதவி இயக்குநர் அலுவலகம் கட்ட ரூ.1 கோடியையும் அவர் ஒதுக்கீடு செய்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:​ 

வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கட்தொகை மற்றும் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்ப நகரக் கட்டமைப்புகளை அதிகப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2011​ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 48.45 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர்.  இது வரும் 20 ஆண்டுகளில் அதாவது 2030​ஆம் ஆண்டில் 67 விழுக்காடாக உயர வாய்ப்பு உள்ளது. 

மக்கள் வேலைவாய்ப்புக்காக அருகிலுள்ள நகரங்களுக்கு அதிக அளவு இடம் பெயர்வதாலும், நகரங்கள்  அதிவேக வளர்ச்சியடைந்து வருவதாலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது.  இதனைக் கருத்தில் கொண்டு,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என்ற ஒரு திட்டத்தினை தொடங்க ஏற்கெனவே ஆணையிட்டார்.

இத்திட்டத்தின்படி, நகர்ப்பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் அகற்றல், சுகாதாரம், மழைநீர் வடிகால், சாலைகள், தெருக்கள், திடக் கழிவு மேலாண்மை மற்றும் வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலையம், ங்காக்கள் போன்ற அனைத்து  அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த  மாநகர் மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு 5,890.12  கோடி ரூபாயும், பேரூராட்சிப் பகுதிகளுக்கு 763.91 கோடி ரூபாயும் என மொத்தம்  6,654.03 கோடி ரூபாய்  அளவுக்கு பணிகள் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே  உத்தரவிட்டுள்ளார். 

இதன் அடிப்படையில், முதற்கட்டமாக சென்ற ஆண்டு அதாவது 2011-​12 ஆம் ஆண்டு, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில்  அடிப்படை வசதிகளை ஏற்படுத்த  506 கோடியே 48 லட்சம் ரூபாயும்,  பேருராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த  250 கோடியே 80 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 757.28 கோடி ரூபாய் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று,  இந்த ஆண்டு அதாவது 2012-​13 ஆம் ஆண்டிலும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திட, சென்னை தவிர பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு 500 கோடி ரூபாயும், பேரூராட்சிகளுக்கு 250 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 750  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சிகளின் அலுவலகங்களுக்கு  அதிக அளவில் பொதுமக்கள்  வருகைப் புரிவதைக் கருத்தில் கொண்டும்,  பழைய கட்டடங்களில் இயங்கி வரும் பேரூராட்சி அலுவலகங்களை  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றியமையக்கும் பொருட்டும், எல்லா பேரூராட்சிகளுக்கும் புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டித்தர  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.  

இதன் அடிப்படையில், இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம்  ஆண்டில் வேலூர் மாவட்டத்திலுள்ள பென்னாத்தூர் பேரூராட்சி, சேலம் மாவட்டத்திலுள்ள பனைமரத்துப்பட்டி பேரூராட்சி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரகண்டநல்லூர்  பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பண்ணைக்காடு பேரூராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிப்பாளையம் மற்றும் பள்ளப்பாளையம் பேரூராட்சிகள், ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை மற்றும் வெங்கம்ர் பேரூராட்சிகள், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி மற்றும் சாயல்குடி பேரூராட்சிகள், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு, திருக்குருங்குடி, பத்தமடை மற்றும் திசையன்விளை பேரூராட்சிகள்  மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பேரூராட்சி என 15 பேரூராட்சிகளுக்கு  அலுவலகக் கட்டடம் கட்ட பேரூராட்சி ஒன்றுக்கு 40 லட்சம் ரூபாய் வீதம் 6 கோடி ரூபாயும், திருநெல்வெலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம்  கட்டுவதற்கு 1 கோடி ரூபாயும் என மொத்தம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகளினால், தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மேம்படவும், உள்ளாட்சி அமைப்புகளின்  பணிகள் மேன்மை அடைவதற்கும் வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்