முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி தயாநிதிக்கு எதிரான புகார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யஉத்தரவு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, ஆக. - 18 - 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமர், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி ஊழல் கண்காணிப்பு இயக்கத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பொது நல தகவல்களை பெறும் ஆர்வலர் விவேக் குமார் கர்க் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை நீதிபதி சங்கீதா திங்கரா செஹ்கல் விசாரித்தார். அப்போது ஆஜராகி விவேக் குமார் வாதிடுகையில், 2008 ம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ. ராசா இருந்த போது நடைபெற்ற ஒதுக்கீட்டு முறைகேடு பற்றியே சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அலைக்கற்றை ஒதுக்குவதற்கு முன்பு அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு கடந்த 2006 ம் ஆண்டில் தயாரித்த அலைக்கற்றை பயன்பாட்டு விதிமுறைகளை தனது வசதிக்கு ஏற்ப தயாநிதி மாறன் திருத்தி அமைத்தார். இது தொடர்பாக அவரே பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். 

அது தொடர்பான விவரத்தை சி.பி.ஐ. தனது விசாரணையில் எங்குமே பதிவு செய்யவில்லை. அலைக்கற்றை ஒதுக்கும் நடைமுறை விதிகளை திருத்தியதுதான் முறைகேடு செய்ய தூண்டியிருக்கிறது என்றார். இது தொடர்பான ஆதாரங்களுடன் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் கடந்த ஆண்டில் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து 10 தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஊழல் கண்காணிப்பு இயக்ககத்திடம் புகார் அளித்தோம். அங்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவேக் குமார் வாதிட்டார். இதையடுத்து விவேக் குமார் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிற விசாரணை நிலவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஊழல் கண்காணிப்பு இயக்ககத்திற்கு நீதிபதி சங்கீதா உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்