முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஆர்.பி. உறவினர்களின் முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஆக.25 - கிரானைட் முறைகேடு தொடர்பாக போலீசார் தங்களை கைது செய்யக்கூடும் என கருதி மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த  கிரானைட் அதிபர் பிஆர்பியின் மகன்கள் மற்றும் உறவினர்களின் முன்ஜாமீன் மனுக்களை டிஸ்மிஸ் செய்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

   கடந்த திமுக ஆட்சியின் போது மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா 18 குழுக்களை அமைத்து குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இந்த ஆய்வில்  ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிஆர்பி  எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன அதிபர் பி.பழனிச்சாமி, அவரது மகன்கள் செந்தில் குமார், சுரேஷ்குமார், மத்தியஅமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி உள்பட 10க்கும் மேற்பட்ட கிரானைட் அதிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து பிஆர்பி மற்றும் துரைதயாநிதி உள்பட கிரானைட் அதிபர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போது பிஆர்பி போலீசில் சரண் அடைந்தார். இதே போல மதுரா கிரானைட் அதிபர் பன்னீர் முகமதும் போலீசில் சரண் அடைந்தார்.

   இதற்கிடையில்  பிஆர்பி தனது முன்ஜாமீன் மனுவை  வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில் மற்றவர்களின் மனுக்கள் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பிஆர்பியின் மகன்கள் மற்றும் உறவினர்களின் முன்ஜாமீன் மனுக்கள் மீது நாளை (நேற்று) தீர்ப்பு வழங்கப்படுவதாகவும், துரைதயாநிதி உள்பட மற்றவர்களின் முன் ஜாமீன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4 ம் தேதிக்கு தள்ளி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று பிஆர்பியின் மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், உறவினர்கள் மகாராஜன், தெய்வேந்திரன், முருகேசன் ஆகியோரின் மனுக்கள் மீது நீதிபதி மதிவாணன் தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது, 

     சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு அதை மூடி மறைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. கனிமவள குற்றச்சாட்டை அரசு விசாரிக்க கூடாது என்று கூற முடியாது. நாட்டில் உள்ள கனிம வளங்களில் தவறு நடந்தால் அதை விசாரிக்கும் பொறுப்பு அரசுக்கு  உள்ளது. ஆய்வு அறிக்கையில் ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் வழக்கை விசாரிக்க முகாந்திரம் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க கூடாது என கூறும் மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அரசுக்கு சொந்தமானதாக இருந்தாலும், தனியாருக்கு சொந்தமானதாக இருந்தாலும் கனிம வளம் அரசின் சொத்து. அந்த விதிப்படி நடவடிக்கை எடுப்பது தவறு என கூறமுடியாது. கனிமங்களை வெட்டி எடுத்தது நியாயம் என்றும், அதை ஆய்வு செய்வது தவறு என்று  கூறும் வாதத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. உரிமம் பெறும் போது விதியின் நிபந்தனையை ஒப்புக்கொண்ட சரத்துக்கள் மீறப்பட்டுள்ளது. அதையும் விசாரிக்க வேண்டும். சாதாரண வழக்கு என்றால் கனிம வள விதிப்படி ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5ஆயிரம் அபராதமும் விதிக்கலாம். ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டியதுள்ளது. தற்போது ஆரம்ப கட்டத்தில் விசாரணை இருப்பதால் மனுதாரர்களின்  முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி மதிவாணன் தீர்ப்பில் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்