முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை ஒழிக்க வலியுறுத்தி சமூக சேவகர் அண்ணா ஹஸரே 2-வது நாளாக உண்ணாவிரதம்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.- 7 - ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹஸரே நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.  நாட்டில் ஊழல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதோடு ஏழைகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். இதை தடுக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல சமூக சேவகர் அண்ணா ஹஸரே,பிரதமர் மன்மோகன் சிங்கை பல முறை சந்தித்து வலியுறுத்தினார். இதனையொட்டி லோக்பால் மசோதாவுக்கான விதிமுறைகளை உருவாக்க மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி அமைக்கப்பட்டதை வரவேற்ற ஹஸரே, தலைவராக சரத்பவாரை நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சரத்பவார் அந்த மாநிலத்தில் ஏகப்பட்ட நிலத்தை சுற்றிவளைத்துப்போட்டுள்ளார். அப்படிப்பட்டவரை கமிட்டி தலைவராக நியமிக்கக்கூடாது என்று ஹஸரே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 

மேலும் லோக்பால் மசோதா நிறைவேற்றுதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியும் நேற்றுமுதல் டெல்லியில் உள்ள சந்தர்மந்தர் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக அவர் நேற்று காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு ஊர்வலமாக வந்தார். நேற்று இரண்டாவது நாளாக ஹஸரே உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அதேசமயத்தில் தனது உண்ணாவிரதத்திற்கும் அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் ஹஸரே தெரிவித்துள்ளார். என்னுடைய போராட்டம் தேவையற்றது, அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று காங்கிரஸ் கூறியிருப்பதற்கும் ஹஸரே கண்டனம் தெரிவித்துள்ளார். லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதோடு கமிட்டியில் மக்கள் பிரதிநிதிகளை நியமித்தால்தான் உண்ணாவிரதத்தை நிறுத்துவேன். இல்லாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஹஸரே உறுதிபடக்கூறினார். ஹஸரே உண்ணாவிரதத்திற்கு சுவாமி அக்னிவேஷ், கிரன்பேடி, சந்தீப் பாண்டே ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!