முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஊழல்: குற்றவாளிகளிடம் இந்தவாரம் சி.பி.ஐ. விசாரணை துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 17 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 கம்பெனிகளின் நிர்வாகிகளிடம் இந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்க உள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்த ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணையை பாராளுமன்ற பொது கணக்கு குழுவும் நடத்தி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு வழக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக ஜே.எல்.டி. யவத்மால் எனர்ஜி லிமிடெட், ஜே.ஏ.எஸ். இன்ப்ராஸ்ட்ரக்சர், ஏ.எம்.ஆர். அயர்ன் அண்ட் ஸ்டீல் உள்ளிட்ட 5 கம்பெனிகள் மீது மத்திய புலனாய்வு துறை நிறுவனமான சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இநத வழக்கில் யார் யாரிடம் விசாரணை நடத்துவது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் இறுதி முடிவு செய்துள்ளனர். இந்த 5 கம்பெனிகளுக்கு சொந்தமான கட்டிடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் சி.டி.க்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணையை துவக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி. ஐ. வட்டாரங்கள் கூறியுள்ளன. யார் யாரிடம் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த விசாரணை இந்த வாரம் தொடங்கப்பட்டு விடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. ஒரு கம்பெனியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவரிடமும் அவரது சகோதரர்களிடமும் விசாரணை நடத்த இருப்பதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறியுள்ளன. முதல் கட்டமாக 3 கம்பெனிகளை சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் இரண்டாவது கட்டமாக இதர 2 கம்பெனிகளின் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் சி.பி. ஐ. வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்