முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைக்கோட்டை பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படையல்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்சி. செப்.20 - விநாயகர் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் இவ்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழா நேற்று இங்கு சிறப்பாக நடந்தது. இதையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் மற்றும் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோ எடையுள்ள மொத்தம் 150 கிலோ எடையுள்ள பிரமாண்டமான கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. 

இதற்காக கோவில் மடப்பள்ளியில் பச்சரிசி மாவு, உருண்டை வெள்ளம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலக்கப்பட்டது. இந்த கலவையை இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து நேற்று அதிகாலை வரை தொடர்ந்து 18 மணிநேரம் கொழுக்கட்டை அவித்தனர். 

அதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் அடிவாரத்தில் இருந்து கொழுக்கட்டையை தொட்டில் போன்று கட்டி உச்சி பிள்ளையாருக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விநாயகனுக்கு சுடச்சுட கொழுக்கட்டை நெய் வேத்தியம் படைக்கப்பட்டது. அப்போது சிறப்பு ஆராதனைகள் அபிஷேகங்கள் உச்சிபிள்ளையாருக்கு நடந்தது. இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் படிஏறி மலைக்கோட்டை மீதுள்ள விநாயகனை காண கியூ வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

மேலும் காலை 10.30 மணிக்கு மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள  மாணிக்கு விநாயகருக்கு கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். 

இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி, மலைக்கோட்டை கோயில் இணை ஆணையர் ஜெயப்பிரியா, முன்னாள் அறங்காவலர் முதலியார் சத்திரம் சிங்காரம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்குகொண்டனர். 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 2ந்தேதி வரை விநாயகர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

திருச்சி மாநகரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவிலில் 17 அடி உயர பிரமாண்டமான விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக படையல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்