எந்த கட்சிக்கு ஆதரவு? நிதிஷ்குமார் நிபந்தனை

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, செப். 21 - பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முன்வரும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மத்திய அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகிவிட்ட நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்த நிலையில் இருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவை 273 எம்.பிக்கள். ஆனால் தற்போது 254 எம்.பிக்களின் ஆதரவுதான் காங்கிரஸ் கூட்டணிக்கு இருக்கிறது.

சமாஜ்வாடி கட்சியும் அனேகமாக அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. தி.மு.க வும் கூட அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளக் கூடும் என செய்திகள் உலா வருகின்றன. இதனிடையே பீகார் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ்குமார், 

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜியின் கட்சி விலகி உள்ளதால், மத்திய அரசியலில் தற்போது மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பீகார் மாநிலத்திற்கு எந்த கட்சி சிறப்பு அந்தஸ்து அளிக்க முன்வருகிறதோ, அந்த கட்சி மத்தியில் அடுத்து ஆட்சி அமைப்பதற்கு ஜனதா தளம் ஆதரவு அளிக்கும். 

தற்போதைய சூழ்நிலை காரணமாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆட்சி அமைப்பதற்கு தங்களுக்கு தேவையான எம்.பி.க்களை திரட்டும் வல்லமை அந்த கட்சிக்கு உள்ளது. ஆனால், வரப்போகும் வரப்போகும் தேர்தலில் அந்த கட்சி தோல்வி அடைந்து அவமானத்தை சந்திக்கும் என்றார்.

அதே நேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டதால், ஏற்பட்டுள்ள காலியிடத்தை ஐக்கிய ஜனதாதளம் நிரப்புமா என்பது குறித்து அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து கட்சிகள் கழன்று கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க வுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நிதிஷ்குமார் பேசியிருப்பதாகவே அரசியல் பார்வயாளர்கள் கருதுகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: