அமைச்சரவையில் இருந்து மம்தா கட்சி மந்திரிகள் ராஜினாமா

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.22 - டீசல் விலை உயர்வு,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து நேற்று ராஜினாமா செய்துவிட்டனர். இந்த 6 அமைச்சர்களும் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் சந்தித்து கொடுத்தனர். 

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் என்று கூறிக்கொண்டு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 ஐ மத்திய அரசு உயர்த்தியது. இதற்கு பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் மட்டுமல்லாது மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தி.மு.க.கூட எதிர்ப்பு தெரிவித்தது. டீசல் விலை உயர்த்தப்பட்ட ஒருசில நாட்களில் உள்நாட்டு விமானபோக்குவரத்துத்துறை, மின்சார துறை, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்தது. இதற்கு காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டணியில் இடம் பெற்றுள்ள போதிலும் டீசல் விலை உயர்த்தப்பட்டது, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்தது தொடர்பாக என்னிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். அதோடுமட்டுமல்லாது டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 1 முதல் 2 வரை குறைக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வருடத்திற்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் வழங்க வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதை 3 நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அமைச்சரவையில் இருந்து எனது கட்சி அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் ஆதரவை வாபஸ் வாங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தார். இதனையொட்டி மத்திய அரசு ஆட்டம் காணும் நிலைக்கு வந்தது. மம்தா பானர்ஜியை சமாதானப்படுத்த காங்கிரஸ் சார்பாக முயற்சிகள் நடந்தது. முயற்சி வெற்றிபெறவில்லை. மம்தா விதித்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசும் தனது நிலையில் உறுதியாக இருந்தது. இதனால் அமைச்சரவையில் இருந்து மம்தா கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்களும் நேற்று ராஜினாமா செய்துவிட்டனர். டெல்லியில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் அலுவலக வீட்டிற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் முகுல்ராய், சுதீப் பந்த்யோபாத்யாய், சுல்தான் அகமத், செளகதா ராய், சிசிர் ஆதிகரே, சி.எம். சத்வா ஆகிய 6 அமைச்சர்களும் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நம்பர் 7 என்ற நம்பரையுடைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலக வீட்டிற்கு சென்று அவரிடம் ராஜினாமா கடிதத்தை நேரடியாக கொடுத்தனர். ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங் பெறும்போது நீங்கள் ராஜினாமா செய்வது எனக்கு ரொம்ப கவலை அளிக்கிறது என்று கூறியதாக பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பந்த்யோபாத்யாய் கூறினார். இந்த 6 அமைச்சர்களில் முகல்ராய் மட்டும் கேபினட் அமைச்சர். இவர் கடந்த மார்ச் மாதம்தான் ரயில்வே கேபினட் அமைச்சரானார். மற்ற 5 அமைச்சர்களில் பந்த்யோபாத்யாய் சுகாதாரத்துறை இணைஅமைச்சராகவும், அகமத், சுற்றுலாத்துறை இணைஅமைச்சராகவும், செளகதா ராய், நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சராகவும், ஆதிகரி,கிராமப்புற வளர்ச்சித்துறை இணைஅமைச்சராகவும், சி.எம்.ஜத்வா செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகவும் இருந்தனர். மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளவர்களின் கட்சியான திரிணாமூல் காங்கிரசில் 19 எம்.பி.க்கள் உள்ளனர். அதேசமயத்தில் 22 எம்.பி.க்கள் கொண்ட சமாஜ்வாடி கட்சியும் 21 எம்.பி.க்களை கொண்ட பகுஜன்சமாஜ் கட்சியும் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு தொடரும் என்று அறிவித்துள்ளன. அதனால் 19 எம்.பி.க்களை கொண்ட திரிணாமூல் காங்கிரசானது மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றாலும் ஆட்சி கவிழும் அபாயம் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: