விமானம் கொள்முதல்: மத்தியரசுக்கு கோர்ட்டு நோட்டீசு

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.22 - ஏர் இந்திய விமான கம்பெனியானது விமானம் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்பும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்நாட்டு விமானபோக்குவரத்துத்துறை அமைச்சராக பிரபுல் படேல் இருந்தார். அப்போது ஏர் இந்தியா கம்பெனிக்கு ரூ.70 ஆயிரம் கோடியில் 111 விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் லாபம் தரும் விமானபோக்குவரத்து பாதைகள் தனியார் விமான கம்பெனிக்கு ஒதுக்கப்பட்டது. அதோடுமட்டுமல்லாது ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கம்பெனிகள் இணைக்கப்பட்டன. வெளிநாடுகளில் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதுகுறித்து சி.பி.ஐ. மற்றும் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு சேவை நிறுவனம் சார்பாக பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. விமானங்கள் கொள்முதல் செய்தது தொடர்பாக மத்திய தலைமை கணக்கு அலுவலகம் ஆய்வு செய்து வருகிறது. அதனால் இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்துவிட்டது. அதேசமயத்தில் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக அனைத்து விஷயங்களையும் மத்திய தலைமை கணக்கு அலுவலகம் விரிவான முறையில் ஆய்வு செய்யும் என்று நம்புவதாக ஐகோர்ட்டு தெரிவித்தது. ஐகோர்ட்டு மனுதள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அந்த அமைப்பு சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு, மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்பும்படி உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: