முக்கிய செய்திகள்

அசாமில் 2-வது கட்ட தேர்தல் - மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      இந்தியா
asam6

கவுகாத்தி,ஏப்.12 - அசாம் மாநில சட்டசபைக்கு நேற்று இரண்டாவது கட்ட தேர்தலின்போது மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இரண்டாவது கட்டமாக 64 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் 126 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தல் கடந்த 4-ம் தேதி 62 தொகுதிகளுக்கு நடந்தது. இதில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். மாநில வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 74 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது கட்ட தேர்தலின்போது 64 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது கட்ட தேர்தலிலும் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு நேற்றுக்காலை சரியாக 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலை 7 மணிக்கு முன்பே வந்து வரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டனர். வாக்களிப்பதற்காக 90 வயது முதியவர் தன் மகனுடன் வந்து ஓட்டளித்தார். அதே மாதிரி 90 வயது மூதாட்டி ஒருவர் கம்பை ஊன்றிக்கொண்டு வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருந்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. கவுகாத்தி கிழக்கு தொகுதி மற்றும் திஸ்பூர் தொகுதிகளில் மக்கள் விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு ஏராளமானோர் வந்து வாக்களித்து சென்றனர் என்று வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இரண்டாவது கட்ட தேர்தலின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் நேற்று பிற்பகல் வரை வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்ததாக தகவல் இல்லை. இந்த 64 தொகுதிகளிலும் 96 லட்சத்து 77 ஆயிரத்து 113 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 596 வேட்பாளர்களின் தலைவிதியை நேற்று நிர்ணயித்துள்ளனர். இந்த 596 வேட்பாளர்களில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான பிரபுல்லா குமார் மகந்தா, எதிர்க்கட்சியான அசாம் கன பரிஷத் தலைவர் சந்திர மோகன் பதோவரி மற்றும் மாநில அமைச்சர்கள் ஹிமந்தா பிஸ்வாஹ சர்மா, ராக்கிபுல் ஹூசைன் ஆகியோரும் அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: