முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேஜரிவாலுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு - பாஜக

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது தில்லி, நவ.- 1 - கேஜரிவால் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து, இந்தியாவில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடான `கமல் சந்தேஷ்' இது தொடர்பாக வெளியிட்டுள்ள தலையங்க கட்டுரை:​- கேஜரிவாலின், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி வருகிறது. கட்கரிக்கு எதிரான குற்றச்சாட்டின் பின்னணியில் சிலர் உள்ளனர். கேஜரிவாலுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் உள்ள தொடர்பு குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும் முயற்சிகளில் கேஜரிவால் குழு ஈடுபட்டுள்ளது. இதன் பின்னணியில், இந்தியாவுக்குத் தொடர்பில்லாதவர்கள் உள்ளனர். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக அவர் வெளிநாடுகளில் பணம் பெறுகிறார். அண்ணா ஹசாரேவுக்கு விசுவாசமாக இருக்க முடியாத அவரால், நாட்டுக்கு மட்டும் எப்படி விசுவாசமாக இருக்க முடியும்?. இந்தியாவின் ஒவ்வொரு மனிதரின் ஆன்மாவிலும், ஜனநாயகம் ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை கேஜரிவால் மறந்து விட்டார் என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேஜரிவால் பதிலடி: இது குறித்து கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறியது: பாஜக பதற்றமடைந்துள்ளது; முற்றிலும் நிலை குலைந்து என்ன செய்வது என்று புரியாமல் உள்ளது. ரூ.20 ஆயிரத்துக்குக் குறைவாக நன்கொடை தந்தவர்களின் பட்டியலை வெளியிட வேண்டியதில்லை என்ற விதிமுறையைப் பயன்படுத்தி, வருமான வரித்துறையின் நடவடிக்கையில் இருந்து பாஜக தப்ப முடியாது. ரூ.20 ஆயிரத்துக்குக் குறைவாகக் கொடுத்தவர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட வேண்டும். அப்போதுதான், பாஜக ஆளும் மாநிலங்களில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் உண்மையில் ஆதாயமடைந்தவர்கள் யார் என்பது தெரிய வரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்