ஒபாமாவுக்காக கிளிண்டன் தீவிரவாக்கு சேகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நவ. - 6 - அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. கடந்த பல மாதங்களாக நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒபாமாவுக்கு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதோடு மட்டுமல்லாம, தேர்தல் நிதி திரட்டுவதிலும் பெரும் பங்காற்றி வருகிறார் கிளிண்டன். கடந்த 24 வருட அமெரிக்க வரலாற்றில் பில் கிளிண்டனின் 8 வருட ஆட்சி தான் பொற்காலமாக இருந்தது. பதவியில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்தால் கூட, அதிபராக அமெரிக்க மக்கள் அதிகம் நேசிக்கும் தலைவராக மதிக்கப்படுகிறார். எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் கூட க்ளிண்டன் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுக்கின்றனர். கிளிண்டனின் ஆட்சிக் காலத்தில், திட்டங்களைக் குறை கூறியவர்கள் கூட, பொருளாதார வளர்ச்சியை கண்டு வாயடைத்து போய் விட்டனர். தொடர்ந்து வந்த புஷ்சின் எட்டாண்டு கால மோசமான ஆட்சி கிளிண்டனுக்கு மேலும் புகழ் சேர்த்தது. அதிபராக இருந்து ஒய்வு பெற்ற பின்தான் அவருக்கு அதிக புகழ் என்று கூட சொல்லலாம். தனது ஒட்டு மொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி, ஒபாமாவுக்காக கிளிண்டன் ஓட்டு வேட்டையாடி வருகிறார். ஜனநாயக் கட்சி மாநாட்டில் கிளிண்டனின் பேச்சு நாடெங்கும் புதிய அலையை உருவாக்கியது. பொருளாதாரம் குறித்த ராம்னியின் கணக்கு சரியாக வரவில்லை என்ற அவரது புள்ளி விவர பேச்சு, நடு நிலையாளார்களை சிந்திக்க வைத்துள்ளது. நான் ஆட்சிக்கு வந்த போது இருந்த நிலைமையை விட, ஒபாமா படு மோசமான பொருளாதார நிலையில் பொறுப்பேற்றார். நான் மட்டுமல்ல, வேறு எந்த அதிபராக இருந்தால் கூட, இந்த அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்தி, மேம்படுத்தியிருக்க முடியாது என்று பல விவரங்களோடு விளக்கமாக கூறியிருந்தார். தொடர்ந்து முக்கிய பிரச்சார நிகழ்வுகளில் ஒபாமாவுடன் இணைந்து ஒரே மேடையில் தோன்றி வருகிறார் கிளிண்டன். இந்த தேர்தலை பொது வாக்காளர்களுக்கு அதிபர் க்ளிண்டன் அளவுக்கு யாரும் எடுத்துச் செல்லவில்லை என்றே சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: