அமெரிக்க அதிபர்தேர்தல்: முன் வாக்குப்பதிவில் ஒபாமாமுன்னணி

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நவ. - 7 - பல ஆண்டுகளுக்கு பிறகு கடும் போட்டி நிலவும் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முடிவுக்கு வந்தது. இதுவரை பல மாநிலங்களில் நேரிடையாகவும், தபால் மூலமாகவும் முன் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வந்தன. அவற்றில், ஒபாமா முண்ணனி வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடித்தட்டு, நடுத்தர மக்களே, முன் வாக்குப்பதிவுகளில் அதிகம் கலந்து கொள்வதால் இது எதிர்பார்த்த செய்தியாகத்தான் இருக்கிறது. 2000 ம் வருட தேர்தலில் டிப்ளோரிடாவில் வெறும் 547 வாக்குகள் அதிகமாக பெற்று ஜார்ஜ் புஷ் அதிபர் பதவியை கைப்பற்றினார். தற்போதைய முன் வாக்குப் பதிவில் டிப்ளோரிடாவில் 47 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 42 சதவீதம் ஒபாமா கட்சியினரும், 39.5 சதவீதம் ராம்னி கட்சியினரும் 18 சதவீதம் எந்த கட்சியையும் சாராதவர்கள். பெரும் கூட்டம் இருந்ததால், சில பகுதிகளில் முன்வாக்குப் பதிவு நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதுவரை ஏழு லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ள நெவடாவில் ஒபாமா கட்சியினர் 44 சதவீதமும், ராம்னி கட்சியினர் 37 சதவீதமும் வாக்களித்துள்ளனர். எந்த கட்சியையும் சாராதவர்கள் 19 சதவீதம். இன்னொரு முக்கியமான திருப்புமுனை மாநிலமான ஐயோவாவிலும் ஒபாமா கட்சியினர் 42 சதவீதம், ராம்னி கட்சியினர் 32 சதவீதம், பொது வாக்காளர்கள் 25.6 சதவீதம் என 6 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில், உட்கட்சி தேர்தல் முதல் அதிபர் தேர்தல் வரை ஒபாமாவுக்கு ஐயோவாவில் பெரும் ஆதரவு கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது ராம்னிக்கு சாதகமாக திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட வட கரோலினா மாநிலத்தில் பதிவான 27 லட்சம் வாக்குகளில் 48 சதவீதம் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியை சார்ந்தவர்கள். 31 சதவீதம் ராம்னியின் குடியரசுக்கட்சியும் மீதம் 21 சதவீதம் பொது வாக்காளர்களும் ஆவர். ஏ.பி.சி - வாஷிங்டன் போஸ்ட் கருத்துக்கணிப்பில் 51 சதவீத்த்தினர் ஒபாமாவின் அதிபர் செயல்பாட்டை அங்கீகரித்துள்ள்னர். பொருளாதார விஷயத்தை யார் சிறப்பாக கையாளக் கூடியவர் என்பதிலும் ராம்னியை விட ஒபாமாவுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. தங்களின் சொந்த விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு, ஒபாமா தான் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என 55 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். நியூ ஹாம்ப்ஷையர் மாநிலத்தில் நடந்த பிரச்சார ஊர்வலத்தில், கடைசிக் கட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறீர்கள் என்று சி.பி.எஸ் செய்தியாளர் கேட்ட போது 'பிராத்தனை செய்கிறோம் என்று பதில் சொல்லியுள்ளார். இன்னொரு தேர்தல் குழு முக்கிய உறுப்பினரோ ஒபாமா கண்டிப்பாக தோல்வி அடைவார் என என்னால் சொல்ல முடியவில்லை என்று கூறியுள்ளதாக சி.பி.எஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: