முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 75.2 சதவீதம் ஓட்டுகள் பதிவானது

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.14 - தமிழகம் மற்றும் புதுவையில் 4 அடுக்கு பாதுகாப்புடன் தேர்தல் நேற்று (ஏப்.13) விறுவிறுப்புடனும், அமைதியாகவும் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.   

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நேற்று (புதன்கிழமை) ஒரே கட்டமாக நடந்தது. ஓட்டுப்பதிவுக்காக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் அமைத்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

ஓட்டுப்பதிவுக்காக 66 ஆயிரத்து 799 மின்னணு எந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.அவற்றோடு 62 ஆயிரத்து 461 மைய கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த எந்திரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய, அதிகாலை 6 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்திப் பார்க்கப்பட்டது. காலை 8 மணிக்கு 234 தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு தொடங்கியது. காலை முதலே ஓட்டுப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. 4.71 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.க 

ாலை 8 மணிக்குத்தான் ஓட்டுப்பதிவு தொடங்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த போதிலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே 7 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிகளுக்கு வரத் தொடங்கி விட்டனர். சில வாக்குச் சாவடிகளில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் 7.30 மணிக்கே வரிசையாக நின்று இருந்தனர். 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கிய சமயத்தில் வாக்காளர்கள் nullநீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் உக்கிரம் அதிகமாகி விடும் என்ற காரணத்தால் முதியவர்கள் பலர் காலையிலேயே வந்து தங்கள் வாக்களிக்கும் கடமையை செய்து முடித்தனர். முதன் முதலாக வாக்களிக்கும் சுமார் 80 லட்சம் இளைஞர்களும் வாக்குச் சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்திருந்தனர். 

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் 9 மணிக்குள் அதாவது முதல் ஒரு மணி நேரத்துக்குள் 10 சதவீதம் பேர் தங்களது வாக்கை பதிவு செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. 11.30 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 25 முதல் 30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்ததை காண முடிந்தது. 11 மணி நிலவரப்படி ஸ்ரீரங்கம் தொகுதியில் சுமார் 32 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்காளர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக தேர்தல் கமிஷன் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தது. மாற்றுத் திறனாளிகள் சாய்வுத் தாங்களை பயன்படுத்தி சிக்கலின்றி வாக்களித்தனர். அது போல பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையை பயன்படுத்தி எளிதாக ஓட்டு போட்டனர். வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அதிரடிப்படை மற்றும்  மாநில காவல்துறை ஆகிய  4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவில் எங்கும் சர்ச்சை ஏற்படவில்லை. ஓட்டுப்பதிவு மிக, மிக அமைதியாக நடந்தது குறிப்பிடத்தக்கது. சில வாக்குச் சாவடிகளில் மட்டும் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் பழுதாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்தகைய வாக்குச் சாவடிகளில் ஓரிரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப் பதிவு தொடங்கியது. மற்றபடி ஓட்டுப்பதிவில் எந்தவித சிறு சலசலப்பும் உண்டாகவில்லை.தேர்தல் அதிகாரிகள் சுமூகமான ஓட்டுப்பதிவை நடத்தி பாராட்டுதல்களை பெற்றனர். 

புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. 30 தொகுதிகளுக்கும் 851 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் nullநீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர். நகர பகுதி மட்டுமின்றி, கிராமப்பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு இருந்தது. மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 151 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் புதுவையில் மட்டும் 68 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், கூடுதலாக போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று சோதனையும் நடத்தினர். பறக்கும் படையினர் அந்தந்த பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கிறதா? வாக்காளர்களிடம் பிரசாரம் நடக்கிறதா? என தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 5 மணிக்கு பிறகு வந்த வாக்காளர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பிறகு அந்த எந்திரங்கள் அனைத்தும் கார்களில் ஏற்றப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக தேர்தல் அமைதியாக நடைபெற்றது.  தமிழகத்தில் 234 தொகுதிகளின் ஓட்டுக்கள் 91 இடங்களில் எண்ணப்படும். சென்னையில் 16 தொகுதிகளின் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்படும். மே 13​ந்தி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை மின்னணு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!