முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் அருகே இன்ஸ்பெக்டர் அடித்ததில் அ.தி.மு.க.பிரமுகர் பலி

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஏப்.14​ - சேலம் அருகே வாக்குச்சாவடி அருகில் நடந்த மோதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்ததில் அ.தி.மு.க.எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது பிணத்துடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அந்த வழியே வந்த போலீஸ் வாகத்தை மறித்து சூறையாடினர்.

சேலம் சிவதாபுரம் பகுதியில் குடும்பியான் தெருவைச் சேர்ந்தவர் சின்னதம்பி(56). இவர் 22 வது வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகியாக இருந்தார். இவரது மனைவி அம்மணி(45). இவர்களுக்கு இந்திரன்(13) என்ற மகனும், ஹேமலதா(12). என்ற மகளும் உள்ளனர்.சின்னதம்பியின் வீட்டருகில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வாக்குசாவடி அமைந்துள்ளது.நேற்று மாலை 4.30 மணியளவில் இறுதிகட்ட வாக்குபதிவின்போது முறைகேடு செய்ய தி.மு.க.வினர் வாக்குச்சாவடிக்கு முன்பு கூட்டமாக கூட தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த சின்னதம்பி மற்றும் அ.தி.மு.க.வினரும் அங்கு கூடினர். அப்போது இருதரப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது 2 தரப்பினரையும் கலைந்து போகுமாறு கூறினர். அதற்கு அ.தி.மு.க.வினர் தி.மு.க.வினரை போக சொல்லுமாறு தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சின்னதம்பி மற்றும் அ.தி.மு.க.வினரை அடித்துள்ளனர். அப்போது சின்னதம்பியை வயிற்றிலும், நெஞ்சிலும் லத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. வலியோடு வீட்டு வாசலில் போட்டிருந்த கட்டிலில் படுத்தவர் இறந்து போனார்.

இதையறிந்த சின்னதம்பியின் குடும்பத்தாரும், அ.தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே  சின்னதம்பி உடலை கட்டிலோடு தூக்கிக் கொண்டு சிவதாபுரம் மெயின்ரோட்டில் சித்தர்கோவில் செல்லும் சாலையில் கிருஷ்ணப்பா தியேட்டர் அருகில் சாலையில் வைத்துவிட்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு டாடா சுமோ வாகனத்தில் விரைந்து வந்தனர். இதையறிந்த பொதுமக்கள் வேனை மறித்து தாக்கினர். உடனே  இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வாகனத்தை விட்டு இறங்கி தப்பியோடினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சேலம் எம்.பி.செம்மலை பொதுமக்களை அமைதி படுத்தி வன்முறையில் ஈடுபடாமல் தடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் அங்கு வந்து டூ வீலர் மூலம் தப்பிச் சென்றார். 

இந்த சம்பவத்தை அறிந்த அ.தி.மு.க.வேட்பாளர்கள் எம்.கே.செல்வராஜ், ஜி.வெங்கடாஜலம், எஸ்.கே.செல்வம், அ.தி.மு.க.மேற்கு தொகுதி செயலாளர் கே.சி.செல்வராஜ் ,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அருள்புஷ்பராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலை தொடர்ந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வன், பயிற்சி டி.எஸ்.பி.அனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் அவரிடம் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுத்து, ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் சின்னதம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவதாபுரம் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்